நான் உணர்ந்த சிவன்!.. Saravana kumar..

1 comment

நான் உணர்ந்த சிவன்!..
    
கண்ணனின் காதலை,சேட்டையை காளிதேவியின் வீரத்தை, ரெளத்திரத்தை பற்றி எல்லாம் பாடிய பாரதி, சிவனை 'எதிலும் எங்கும் இருப்பான் அவன் யாரோ? எனக்குள் அவன் இருப்பான் அறிவாரோ?' என்று பாடுகிறார்...

சிவனை எவ்வளவு எளிமையாக சொல்லியிருக்கிறார்.. கொஞ்சம் யோசித்தால் நமக்கு இரண்டுவிதமான தொடர்புகள் தான் இருக்கின்றன.. ஒன்று நமக்கு வெளியே உள்ளது.. இன்னொன்று நமக்குள்ளே உள்ளது..இலக்கியத்தில் அகம்,புறம் என்று இருப்பது போல்...

நமது உறவுகள்,வேலைகள், பொருட்கள் எல்லாம் வெளித்தொடர்பு.. நமது உடல், மனம் என்பது எல்லாம் உள்நிலை...

எதிலும் எங்கும் என்ற பதத்தில் மொத்த பிரபஞ்சத்தையும் அடக்கிவிடும் பாரதி, எனக்குள்ளேயும் இருப்பான் அவன் யாரோ? என்றும் பாடுகிறார்.. ஆக சிவன் வெளியே எல்லா இடத்திலும், எனக்குள்ளேயும் இருப்பான் என்கிறார்..

யார் இந்த சிவன்?
சிவன், கடவுளா, மனிதனா, சிலையா, அறிவா,அன்பா,இயற்கையா,மதமா, சைவ சித்தாந்தமா, ஆணா,பெண்ணா,ஜோதியா,நெருப்பா,காற்றா, பூமியா,ஆகாயமா,நீரா?

எந்த வகையிலும் சேராதவன்,ஆனால் எல்லா இடங்களிலும் இருப்பவன் சிவன்..
சிவன் என்பது தனிப்பட்ட அடையாளமல்ல அது ஒரு உணரும் தன்மை..

அறிவியலில் 'Big bang' theory என்ற கூற்று உண்டு. ஆதிநாளில் அண்டத்தில் ஒரு பெருவெடிப்பு உண்டாகி, நட்சத்திரக் கூட்டங்கள், கேலக்ஸிகள் என்று கோடிக்கணக்கானவை உருவானதாக சொல்வார்கள்.... அது வெடித்த வேகத்தில் சிதறிய கேலக்ஸிக்கள் நட்சத்திரக் கூட்டங்களை வைத்துதான் காலமும் தூரமும் பிறந்தது என்று சொல்வார்கள்..ஒளி,ஒலி பிறந்தது அப்போது தான்.. சூரியக்குடும்பம் பிறந்ததும் அப்போது தான்..

அப்பெருவெடிப்புக்கு முன் அங்கு என்ன இருந்தது, ஏன் வெடித்தது என்ற கேள்விக்கு விஞ்ஞானிகளிடம் விடையில்லை..

டெலஸ்கோப் வைத்தும் ஐன்ஸ்டீன், நியூட்டனின் பல சமன்பாடுகளை கொண்டும் 21ம் நூற்றாண்டில்  தான் 'Big bang'  தியரியைக் கண்டுப்பிடித்தார்ரகள்..

ஆனால் இந்தியாவில் 15000 வருடங்களுக்கு முன்பே அண்டம் பற்றி முழுமையாக அறிந்துவைத்திருந்தார்கள்..
(Book courtesy- 'worlds oldest god'...The god name 'Ruthran' in India)

அப்பெருவெடிப்புக்கு முன்னிருந்த தன்மையை தான் ஷிவா அல்லது சிவன் என்று அழைத்தார்கள்.. அத்தன்மையை உணர்ந்தவனையும் சிவன் என்று அழைத்தார்கள்.. அப்படியென்றால் சக்தி என்பது?.. Big bang வெடித்த பின் ஏற்பட்ட ஒளி,ஒலி, வேகத்தை தான் சக்தி என்றார்கள்..

உதாரணமாக, துளியும் வெளிச்சமில்லாத ஒரு இருட்டறையில் இருக்கிறீர்கள்.. நிசப்தமாக இருக்கிறது.... கண்கள் திறந்திருந்தாலும் உங்களுக்கு ஒன்னும் தெரிவில்லை.. இந்த தன்மையை சிவன் என்று வைத்துக் கொள்வோம். இப்போது ஒரு தீப்பெட்டி எடுத்து குச்சியை உரசி நெருப்பு பற்ற வைக்கிறீர்கள்..இப்போது அந்த தீக்குச்சி உராய்தலுக்கு ஒரு சக்தி, நெருப்பு எறிய ஒரு சக்தி,அந்த நெருப்பு நீடித்திருக்க மருந்தில் ஒரு சக்தி, நெருப்பு ஒளி வேகமாக இருட்டை மறைத்தது ஒரு சக்தி என தேவைப்படுகிறது... இப்போது உங்கள் கண்களுக்கு எல்லாம் தெரிகிறது.. ஆக ஒன்று இருந்தால் தான் இன்னொன்று.. இதை தான் சிவனில்லாமல் சக்தியில்லை, சக்தியில்லாமல் சிவனில்லை என்று சொன்னார்கள்.. சிவனை ஆண்தன்மையாகவும், சக்தியை பெண்தன்மையாகவும்  சொன்னார்கள்..

சரி, அண்டத்தை பற்றி 15000 வருடம் முன்பு எப்படி சொன்னார்கள் நம் இந்தியாவில்? டெலஸ்கோப் போன்ற கருவிகள் இல்லாமல் எப்படி சொன்னார்கள்? கோள்களின் நிலை,அதனை கணக்கிட்டு பஞ்சாங்கம் எப்படி கணித்தார்கள்? இங்கிருந்தே சிகப்பு கிரகத்தை செவ்வாய் என்று எப்படி சொன்னார்கள்?.. அபூர்வமான வரலாறு அது..

உணவு, தங்குமிடம், எதிரி அல்லது விலங்கிடமிருந்து தற்காத்து கொள்வது,கலவி என்று 'survival' வாழ்கைதான் இருந்தது பொதுவாக அப்போது உலகெங்கும்.. ஆங்காங்கே சில கண்டுப்பிடிப்புகள் வசதிக்காக அறிமுகம் ஆனது.. சக்கரம்,நெருப்பை உதாரணமாக சொல்லலாம்.. ஆகாயம்,அண்டம் பற்றி எல்லா இடத்திலும் குழப்பமே மிஞ்சியது..
ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு நாகரீகத்திலும் அவரவர் கற்பனைக்கு ஏற்றவாறு அண்டத்தை புரிந்துவைத்திருந்தனர்..

இந்தியாவில் தான் வித்தியாசமாக யோசித்தனர்.. அது ஏன் இந்தியாவில்? என்பதை அப்புறம் பார்க்கலாம்.. (இந்த இந்து, இந்தியா என்ற பெயரே தப்பானது.. பாரதம் தான் உண்மையான சொல்)

பண்டைய பாரதத்தில் அண்டத்தைப் பற்றி பல யூகங்களுக்கு பிறகு ஒன்றை கவனித்தார்கள்.. பஞ்ச பூதங்களான நீர்,நிலம்,நெருப்பு, காற்று,ஆகாயம் பற்றி யோசித்தார்கள்..

நீர் நிலத்திலும் இருக்கிறது.. மழை வானிலிருந்தும் பெய்கிறது.. நம் உடலுக்குள்ளும் நீர் தேவைப்படுகிறது..அதனால்  அண்டமும் நம் உடலும் ஒன்றோ என்று யோசித்தார்கள்..

சூரியன் சுடுகிறது, பொருட்கள் அனைத்தும் சூடாகிறது, நம் உடம்பிலும் சூடு இருக்கிறதே அதனால் அண்டமும் நம் உடலும் ஒன்றுதானோ என்று யோசித்தார்கள்..

நிலமும் மனிதனும் பிரிக்க முடியாதபடி அமைந்திருக்கிறது....பசிக்கு விலங்கை வேட்டையாடி தின்றதை போல மண்ணில் விளைந்தவற்றையும் மனிதன் உண்டிருக்கிறான்... மண்ணிலிருந்து வந்ததை உண்டு உயிர் வளர்த்ததாலும்,பிரமாண்டமாக மண்ணுலகம் பரந்து விரிந்திருப்பதால் உடலும் மண்ணும் ஒன்றோ என்று யோசித்தார்கள் ( மண்ணிலிருந்து சில கெமிக்கல்கள் தோன்றி ஆதிநாளில் ஒரு குழம்பு மாதிரி ஆகி, ப்ரோட்டீன்கள் சேர்ந்து உயிர் வளர்ந்தது என்று சுஜாதாவின் பல அறிவியல் புத்தகத்தில் இருக்கின்றன)

காற்று,தனக்கு வெளியேவும் வீசிக்கொண்டும், தனக்கு மூச்சாகவும் இருப்பதை உணர்ந்து காற்றும் உயிரும் ஒன்று தான் என்ற முடிவுக்கு அப்போதய அறிவுக்கே அவனுக்கு எட்டியிருக்கும்..

ஆக பஞ்ச பூதங்களின் பிரமாண்டத்தை வைத்து அவற்றின் முக்கியத்துவத்தை அறிந்து வைத்திருந்தான்...

4 பூதங்களை வெளியிலும், தன் உடலிலும் உணர்ந்த அவன் ஆகாயத்தை மட்டும் வெளியில் பார்த்துவிட்டு தன் உடலிலே ஆகாயம் எங்கே இருக்கிறதென்று தேடியபோது விடையே இல்லை...மற்ற பூதங்களெல்லாம் தன் உடம்பில் உணர்ந்தவன் ஆகாயம் எங்கே என்று தேடினான்..

மேலே உள்ள ஆகாயத்தை தொட குதித்து பார்த்தான், பறக்க முயற்சித்தான்,மலை உச்சியை அடைந்து பார்த்தான்.. ஆகாயத்தின் விஸ்தாரத்தை, அதன் எல்லையில்லா தன்மையை  அவனால் புரிந்துக்கொள்ள இயலவில்லை..

ஆகாயம் பற்றி அறிந்துக்கொள்ளும் ஆவல் அதிகமானது.. அப்போதுதான் ஒரு உண்மை புலப்பட்டது.... மற்ற 4 பூதங்களும் எல்லா இடங்களிலும்,நம் உடம்பிலும் இருக்கின்ற போது ஆகாயமும் நமக்குள்ளே நிச்சயமாக இருக்கும் என்றும், அதனை தெரிந்துகொண்டால் வானத்தையும் அறிந்து கொள்ளலாம் என்று நம்பினான்..
மகத்தான எண்ணம் அது.. இதற்கு உதாரணமாக இப்போதைய அறிவியலில் நமது டி.என்.ஏ வை வைத்துக்கொண்டு இறந்து போன நமது முன்னோர்களையும் அறிந்துக்கொள்ளமுடியும் அல்லவா? இப்படி தானே டைனோசர்களையும் அறிந்தோம்.. இதே போல தான் பிரபஞ்சத்திலிருந்து தான் அத்தனையும் வந்தது.. நாமும் அப்படிதானே வந்தோம்.. இப்போதும் தொடர்பில் இருக்கின்றோம்.. அதனால் நம்மில் தேடினால் அண்டத்தையும் தெரிந்துக் கொள்ளமுடியும் என்று நம்பினான்..

இதற்காக அவன் பல வகையில் முயற்சி செய்தான்.. நம் உடம்பிற்கு வெளியே நடப்பது எல்லாம் கண்ணுக்கு தெரிந்த அவனுக்கு உடம்பினுள் நடப்பது தெரியவில்லை.. (இங்கே அவன் என்று சொல்வது ஒரு தனி மனிதனை அல்ல..இதனை தனி ஒருவன் மட்டும் கண்டுப்பிடித்தான் என்று சொல்ல முடியாது.. ஒருவன் தெரிந்துக்கொண்டதை அடுத்தவருக்கோ,தன் வாரிசுகளுக்கோ அல்லது கற்களில் செதுக்கியோ செய்தி சொல்லியிருப்பான்)

கண்கள் திறந்து யோசித்தால் வெளிக்காட்சிகள் தோன்றி நம் எண்ணங்களை சிதறடித்துக்கொண்டே வருகிறது என்று கண்கள் மூடி யோசித்தான்.. தூக்கமும் வந்தது.. ஆனால் அதனை மீறி அவன் கண்கள் மூடி தன்னுள் தேடினான்.. மகத்தான சாதனைதான் அது..

மிக தீவிரமான முயற்சியில் அவன் சிலசில உணர்வுகளை உணர்ந்தான்..மெல்ல மெல்ல தன் உடம்பில் ஏற்பட்ட அனுபவங்களை,மாற்றங்களை உணரத்துவங்கினான்.... அவன் ஆரம்பித்த அந்த நிலைக்கு பெயர்தான் 'தியானம்'!

கண்ணை மூடி யோசிக்கும்போது அவன் வசதிக்கு தகுந்தவாறு  டிஸ்டர்ப் ஆகாமல் உட்கார்ந்தோ நின்றுக்கொண்டோ படுத்துக்கொண்டோ ஒருவாறு முறைப்படுத்திக்கொண்டு  இதை செய்தான்...இதற்கு பெயர் தான் 'யோகா'!

ஆனால் தான் ஒன்றும் தியானமோ, யோகாவோ செய்ய வேண்டும் என்று அறிந்து செய்யவில்லை.. அவனுக்கு வேண்டியது வானத்தை அறிந்துக்கொள்வது.. சூரியன்,நட்சத்திரங்கள் ,நிலா கண்ணுக்கு தெரிகிறது.. வேறு என்ன இருக்கிறது வானத்தில் என்பதை அறியவேண்டும்..

காமெடியாக சொன்னால் உட்கார்ந்து யோசிப்பாங்களோ மாதிரிதான் அவன் செய்கை இருந்திருக்கும் .. பல படிகளை கடந்து தன்னை தானே உணரத்துவங்கியபோது பல ஆச்சரியங்கள் அவனுக்குள் நடந்தன.... தன் முயற்சி தீவிரமடைந்தது..  இதற்காக தொந்திரவாக இருந்ததை எல்லாம் விலக்கத்துவங்கினான்.. காட்டில் விலங்குகள் அதிகம் இருப்பதால்,மலை உச்சியில் ஏறி அமர்ந்தான்.. பாறை குகைகளில் தஞ்சம் புகுந்தான்.. தீவிர தியானத்தில் ஆழ்ந்தான்.. தன் நெடுங்கால தவத்தின் இறுதியில் இப்பிரபஞ்சத்தை உணர்ந்தான்.. அவன் வியந்து பார்த்த விண் தன்னுள்ளே உணர்ந்தான்..(நிச்சயமாய் ஒரு கேள்வி எழும்.. நாமும் இப்படி இருந்தால் உணரமுடியுமா? என்று.. நிச்சயமாக மனிதனால் முடியாதது எதுவுமில்லை.. ஆனால் உலகில் எந்த செயலும் ஆரம்பத்தில் திட்ட மிட்டு செய்யவில்லை.. இயல்பாய் நடந்தது.. தற்செயலாய் நடந்தது.. இப்போது எல்லாம் அறிவியல் யுகம்.. கேள்வி யுகம்.. ஒருநாள் குழாயில் தண்ணீர் வரவில்லையென்றால் அது ஒரு வகையாக நம்மை பாதிக்கிறது.. பத்து புத்தகம் படித்தால் பெரிய அறிவு கிடைத்துவிட்டது என்று நினைத்து சண்டைப்போடுகிறார்கள்.. டீச்சரிடம் பவ்வியமாக உட்கார்ந்து எனக்கு ஒன்னுமே தெரியாது என்று நம்பி அவர்கள் சொல்லும் பாடத்தை கவனித்தோமே.. அதே போல்தான் பிரபஞ்சம் என்கிற டீச்சரிடம், எவ்வளவு பெரிய அறிவாளியாக இருந்தாலும், எத்தனை வயசானாலும் எனக்கு ஒன்றும் தெரியாது என்று உட்கார்ந்தால் யார் வேண்டுமானாலும் உணரலாம்)

முதலில் அவன் தனக்குள் உணர்ந்தது 7 சக்கரங்களை!
சக்கரம் என்றால் உடம்புக்குள்ளிருக்கும் சக்கரம் போன்ற பொருளா? இல்லை..
அது உலகில் இருக்கும் அத்தனை உயிருக்கும் இருக்கும் நடுமையங்கள் என்று சொல்லலாம்.. உதாரணத்துக்கு  பூமியை சொல்லலாம்.. பூமியின் நடுப்பகுதிதான் நம்மை இழுத்து பிடித்து வைத்திருக்கிறது என்று சொல்வார்கள்.. 'Centre of gravity' என்றும் சொல்வார்கள்.... அதேப்போல ஒவ்வொருப்பொருளுக்கும் அது எந்த உருவத்தில் இருந்தாலும் அதற்கு நடுமையம் என்று ஒன்று உண்டு.. ஏன் ஒவ்வொரு செல்லுக்குள்ளும் 'Nucleaus' என்று நடுமையம் உள்ளது...

அதே போல் மனிதனுக்கும் நடுமையம் இருக்கிறது.. மனிதனை குறுக்காக சரிபாதி நேராக சரிபாதி என்று அளந்து இரண்டு கோடுகள் சந்திக்கும் புள்ளி தான் நடுமையம்..  இதை 'மூலாதாரம்'.. என்று சொல்லுவார்கள்... இந்த சக்கரம் தான் மனிதனின் மூலமும் ஆதாரமும்..

இதே போல் ஒவ்வொரு உறுப்புக்கும் தனித்தனியாகவும் நடுமையங்கள் உள்ளன. 
முக்கியமாக 7 சக்கரங்கள் உள்ளது..இது பற்றி இவ்வளவு போதும். நாம் சிவனுக்கு வருவோம்..

ஆகாயம் பற்றி மனிதன் உணர்ந்து அறிந்தாலும் அதை அறிவியலாவும் நிருபிக்க முடியும்..உயிர் செல்லை பிளந்து பார்த்தால் நடுவில் நியுக்ளியஸ், மீதி இருப்பது mitochondria, golgibodies இந்த மாதிரி சில இருக்கின்றன.. இதில் vaccule என்று ஒன்று உள்ளது.. அதனுள்ளே இருப்பது வெற்றிடம்தான்.. சக்தி அலைகள் மட்டுமே இருக்கின்றது.. விண்வெளியில் இருப்பதைப் போல என சொல்லலாம்..

உலோகப் பொருளில் இருக்கும் இருக்கும் ஒவ்வொரு அணுவை பிளந்து பார்த்தால் நடுவில் நியுக்ளியஸ் அதை ப்ரோட்டானும், எலக்ட்ரானும் சுற்றி வருகிறது... சூரியனை மற்ற கிரகங்கள் சுற்றுவதை போல... ஒரு அண்டமே ஒவ்வொரு அணுக்குள் ஒளிந்திருக்கிறது... அப்பப்பா!

சரி! எப்படி அறிந்தார்கள்? சாத்தியம் தானா? டெலஸ்கோப்பும்,மைக்ரோஸ்கோப்புமே இவ்வளவு தான் கண்டுப்பிடித்திருக்கும் போது எப்படி எந்த ஒரு கருவியும் இல்லாமல்? காரணம் 'கவனிப்புத் திறன்!'

கவனிப்பது என்றால் 'நான் என் வேலையை கவனமாக செய்வேன்' அந்த கவனமல்ல.. அதிதீவிரமான கவனம்.. இப்போதைய மனிதனால் எந்த ஒரு சிந்தனையும் இல்லாமல்ஒரு நிமிடமாவது இருக்க முடியுமா? தனியாக ஒரு அறையில் எந்த ஒரு சத்தமும் இல்லாமல், இருட்டாக இருந்தாலும், கண்களை மூடினாலும் 5 செகண்ட் மேலே கவனிக்க முடியாது.. ஏதோவொரு எண்ணம் அலைமோதும்.. ஆனால் உடலுக்குள் என்னென்னவென்று கவனிக்க ஆரம்பித்த மனிதன், அதற்கு தடையாக இருந்த அத்தனை எண்ணங்களையும் சிரத்தையுடன் எதிர்கொண்டான்.. அந்த கவனிப்பு தான் பிரபஞ்சம் பற்றி அறிய முடிந்தது.. அதை ஒரு விழுப்புணர்வு நிலை என்று சொல்லுவார்கள்.. நம் காலில் ஒரு முள்ளோ கல்லோ குத்துகிறது என வைத்துக்கொள்வோம்... வலியெடுக்கும்..சின்ன வலி தான்..இந்த வலியை நாம் உணர்வது இரண்டு வழிகளில்.. நம் உடல் முழுவதும் ஒரு கனெக்டிவிட்டியில் இயங்குகின்றன.. அதனால் உடலில் எதாவது ஒரு மூலையில் சிறு பாதிப்பு ஏற்பட்டால் அந்த இடம் நொடிப்பொழுதில் மூளைக்கு தகவல் அனுப்புகின்றது...'பாதிப்பாகி இருக்கிறேன்' என்று சொல்லும்.. இன்னொரு நிகழ்வு, பாதிப்பான செய்தி மூளையை எட்டியதும் சட்டென்று கவனம் பாதித்த இடத்திற்கு போகும்.. இது எல்லாம் 1 நொடிக்கும் மிக குறைவான நேரத்தில் நடப்பது.. காயம் ஆறிவிட்டதா என்று சோதிக்க சட்டென்று நாம்  செய்வது என்ன? ஒன்று காயம் பட்ட இடத்தில் கவனம் செலுத்துவோம் இல்லையென்றால் கைகளால் லேசாக காயம் பட்ட இடத்தை அழுத்தி கவனத்தை அங்கே செலுத்துவோம் தானே? வலியை பொறுத்து காயம் ஆறிவிட்டதா என அறிந்துக்கொள்வோம்.. இது தான் நம் கவன ஆற்றல்.. நமக்கு இது ஒரு சாதாரண ஒரு நிகழ்வு.. ஆனால் கண்ணை மூடி தன்னை உணரும் விழிப்புநிலை அசாரணமானது..  அது ஒரு சாதனை.. தற்காப்பு கலைகளை சொல்லிக்குடுக்கும்போது முதலில் விழிப்புணர்வாக  இருப்பதை தான் சொல்லித்தருவார்கள்.. எதிராளிகள் நம்மை தாக்க வருவதை நொடிப்பொழுதில் அறிந்துக் கொள்வதற்காக அப்படி சொல்லிதருவார்கள்.. அதைவிட இன்னும் அதிகமான விழிப்புணர்வில் தான் பிரபஞ்சம் அறிந்தார்கள் முன்னோர்கள்!

சரி! அதென்ன இந்தியாவில் கண்டுபிடித்தான்?..வேறெங்கும் இப்படி இருந்தது இல்லையா? .. இருந்திருக்கும்..

ஒவ்வொரு கலாச்சாரத்திலும்,ஒவ்வொரு மதத்திலும்  அறிவியல் விஷயங்கள் நிறைய இருக்கின்றது.. பாரதத்தை பொறுத்த வரை ஆதாரங்கள் நிறைய இருக்கிறது..
சிவம் என்பது ஒரே தன்மை தான்.. ஆனால் சக்தி என்பது பலவிதமாக இருந்தது...இருட்டு ஒன்று தான்.. வெளிச்சம் என்பது அளவைப் பொறுத்ததல்லவா? வகை வகையாய்,கலர் கலராக கூட இருக்கிறது.. அது போல தான்.. விண்வெளியை சுற்றி பலவித சக்திகளை உணர்ந்தான்.. சூரியனை சுற்றும் கிரகங்களின் சக்தி அலைகளை  கணக்கிட்டான்.. ஜோதிடம் பிறந்தது!
பஞ்ச பூதங்களின் அமைப்பை சக்தியை உணர்ந்தான்.. அதற்கென கோவிலை கட்டினான்.. (திருவண்ணாமலை,ஸ்ரீ காளஹஸ்தி, சிதம்பரம்,திருவானைக்காவல்,காஞ்சிபுரம்.. அனைத்தும் சிவத்தலங்கள். பஞ்சபூதங்களை அடிப்படையாக கொண்டது) தான் உணர்ந்த தியான நிலையை எழுதினான்... தான் அமர்ந்த யோக நிலையை எழுதினான்..
பிரபஞ்சமே வணங்குவதற்கு உரியதால், எந்த ஒன்றின் மீது வெறுப்பு வரக்கூடாது என்று தான் பார்த்த அனைத்தையும் வணங்கினான்.  ஒரு காகிதத்தை மிதித்தால் தொட்டுக்கும்பிடுவான்.. எந்த எந்த ஒரு செயலையும் செய்யும் முன் இறைத்தன்மையை வணங்கினான்...  தான் உணர்ந்ததை எல்லா மக்களுக்கும் சொல்லி பார்த்தான்.. யாருக்கும் அந்த பொறுமை இல்லாததால், என்றும் அழியாமல் இருக்கும் திடப்பொருளான கல்லை எடுத்து அதற்கு சக்தி ஊட்டி பாதுகாத்து வணங்கினான்..எப்படி என்றால் ஒரு கல்லிற்கு சக்தி ஊட்டி, அதை பாதுக்காப்பதற்காக ஆலயம் எழுப்பினான்..அதாவது ஊரிலியே பெரிய கட்டிடமாக்க விரும்பினான். சின்ன சின்ன வீடுகள், அரசன் வாழும் பெரிய அரண்மனை,இதை விட பெரியதாய் ஆலயம் இருக்குமாறு கட்டினான்..ஆலயம், உள்ளிருக்கும் சக்தியை ஊர் முழுதும் spread செய்வது போன்ற அமைப்பில் கட்டினான்.. ஊர் முழுவதும் அந்த சக்தி சூழலிலேயே இருக்குமாறு செய்தான்.
சப்தங்களில் ஒரு குறிப்பிட்ட  வார்த்தை ஒலிகளை மட்டும் சேர்த்து சேர்த்து அதை ஒலிப்பதற்கென ஸ்ருதியை கொடுத்து அதற்கு மந்திரம் என்று பெயரிட்டான்..
ஸ்வரங்களை ஒழுங்குப்படுத்தி சங்கீதம் படைத்தான், இறைத்தன்மையை பாடினான்..
சாப்பிடும் உணவுக்கு நன்றி சொல்லும்விதம் அறுவடை திருநாள்,நாம் செய்யும் தொழிலுக்கு நன்றி சொல்லும்விதம் ஆயுத பூஜை, முன்னோரை மறக்காமல் இருக்க குல தெய்வம் என்று உருவாக்கினான், இறந்தவரை மறக்காமல் இருக்க திதி சம்பிரதாயங்களை ..
நம் பழைய பாரத கேலண்டரை பொறுத்தவரை கிழமைகள் என்று அப்போது கிடையாது.. ஆங்கில காலண்டரில் தான் மாதத்துக்கு  30 நாட்கள்..அதை நான்கால் வகுத்து வாரம் ஏழு நாட்கள் என்று பிரித்து அதற்கு கிரகங்கள் பெயரை சூட்டினார்கள்.. நாமும் இப்போது அதை பின்பற்றுகிறோம்..
அப்போது எல்லாம் நிலாவை கணக்கிட்டுதான் நாட்கள் கணக்கு.. வளர்பிறை 13 நாட்கள், 14 வது நாள் பெளர்ணமி, பிறகு தேய்பிறை 13 நாட்கள் 14 வது நாள் அமாவாசை.. ஒவ்வொரு பிறைக்கும் நாட்களுக்குக்கும் ஒவ்வொரு தன்மை.. ஒவ்வொன்றிற்கும் பெயர் வைத்தான்.. அதை திதி என்றார்கள்..
இன்று திங்களா,புதனா,வெள்ளியா என்று காலண்டர் பார்த்து தான் சொல்ல முடியும்.. இயற்கையை பார்த்து சொல்ல முடியுமா? ஆனால் இன்று என்ன திதி என்று நிலாவை பார்த்து சொல்லலாம்.. நம் முன்னோர்களுக்கு நிலாவை பார்க்க கூட அவசியம் இல்லை.. கொஞ்சம் கண் மூடினால் இன்று என்ன திதி என்று சொல்லும் திறமையோடு இருந்தார்கள்..

எதற்காக இத்தனை விஷயங்களை உருவாக்கினான்?

முன்பு சொன்னது போல்  சிவன் என்பது ஒரே தன்மை.. சக்தி என்பது பல வகையாக இருக்கிறது...அதை மனிதனுக்கு பயன்படுமாறு ஒவ்வொரு சக்திக்கும் ஒவ்வொரு முறையை உருவாக்கினான்.. உதாரணமாக, மின்சாரம் ஒரு வித சக்தி, மொபைலில் பேச தேவைப்படும் சக்தி வேறு விதமானது.. மின்சாரத்தை தேவைக்கேற்றவாறு உருவாக்கி கம்பிகளால் கடத்தப்படுகின்றன.. செல்போனுக்கு ஒரு டவரும், அதன் அலையை உள்வாங்க ஒரு ட்ரான்ஸ்மீட்டரும் தேவைப்படுகிறது... ஆனால் இந்த அலைகளை நம் கண்களால் காண முடியாது.. அதே போல்,  தன்னால் உணரக்கூடிய பலவிதமான  சக்திகளை இன்னொரு மனிதனின் உடல்,மன நன்மைக்காக மட்டும் உபயோகப்படுத்தினான்... அதற்காக தான் பாதுக்காப்பாக பல வருஷங்கள் மனிதன் பயன்படுத்தும்படி வெவ்வேறு சக்திகள் கொண்ட ஆலயங்களை எழுப்பினான்..

சரி! சும்மா உட்கார்ந்தால் என்ன நன்மை கிடைக்கபோகிறது? போர் தானே அடிக்கும்?
உழைக்கிறோம், சாப்பிடுகிறோம், தங்குவதற்கு வீடு இருக்கிறது, காசும் இருக்கிறது.. வேறு என்ன வேண்டும்?  என்று  நீங்கள் கேட்டால், உங்களுக்கு வாரம் ஒருநாளாவது ஞாயிற்றுக்கிழமை வேண்டுமல்லவா?
பார்க், சினிமா,பீச், நண்பர்கள் எல்லாம் வேண்டுமல்லவா? அந்த தேடலின் பெயர் என்ன? பொழுதுபோக்கு!.. 6 நாள் உழைப்பு, ஒரு நாள் உல்லாசம்.. அதாவது சுதந்திரம்!
யாரும் எதும் கேட்க மாட்டார்கள்.. எங்கே வேண்டுமானாலும் போகலாம் வரலாம்.. அதுதானே தேடல்!
வெள்ளைக்காரன் ஞாயிறுகிழமை விடுமுறையை நமக்கு பழக்கிவிட்டு போய்விட்டான்.. நாமும் அதை பிடித்துக்கொண்டோம்..
வெளிநாட்டில் இளைஞர்கள் ஆடினார்கள்,பாடினார்கள்,குடித்தார்கள்.. இங்கேயும் சிலர் அப்படிதான்.. ஞாயிற்றுகிழமை பொழுதுபோக்காக எதையோ தேடி கடைசியில் திருப்தி அடையாமல் அடுத்து Saturday night பார்ட்டி என்று ஆரம்பித்தான் அதாவது அடுத்த நாள் சண்டே என்பதை கொண்டாட சனிக்கிழமை இரவுகள்..ஆட்டம்,பாட்டு,கூத்து, குடி எல்லாம்.. எல்லாம் கொஞ்ச நாள்.. அப்புறம் எல்லாமே போர் அடித்து அடுத்து என்ன பண்ணலாம் என்ற தேடல்!..... புதுசு புதுசாக என்னென்னமோ ஆரம்பிக்கிறார்கள்.. அதை   hobby என்று பெயர் சூட்டிக்கொண்டார்கள்..

பண்டைய பாரதத்தில் இதற்கு பெயர் 'முக்தி' என்று பெயர் வைத்தான்.. (முக்தி என்றால் மரணமல்ல)...இங்கேயும் ஆடினார்கள்,பாடினார்கள்,குடித்தார்கள்.. ஆனால் எல்லாம் போரடித்து கொஞ்ச காலங்கள்  கழித்து அவன் தன் முன்னோர் கூறியது போல் சும்மா கண்கள் மூடி உட்கார்ந்தான்.. அதன் பிறகு எல்லாமே சுதந்திரமாக உணர்ந்தான்.. செய்யும் வேலை, சாப்பிடும் சாப்பாடு எல்லாவற்றையும் உணர்ந்து செய்யும் ஆற்றல் கிடைத்தது.. முழு வாழ்க்கையும் ஆனந்தமாக உணர்ந்தான்.. ஆட்டம்,பாட்டத்துக்கு அவசியம் இல்லாதபடி அவனுக்கு கிடைத்தது.. இதன் பெயர் 'முக்தி''!

'கடவுள் கடவுள்' என்று சொன்னானே,அதன் அர்த்தம் 'கட உள்' 'கட உள்' என்பதாகும். 'உனக்குள்ளே கடந்து போ' என்பதே....

பிரபஞ்ச அறிவியலை ஃபார்முலாவாகவும், பொருட்களை வைத்தும் கண்டுப்பிடிக்காமல் தன் உடல் உணர்வால் அறிந்தவர்கள் நம் முன்னோர்கள்.. அதற்கு அவர்கள் எந்த பெயரும் சூட்டிக்கொள்ளவில்லை.. அதை ஒரு மதமாகவும் கருதவில்லை..  எல்லாமே சிவமயம் என்று சொன்னார்கள்.. பாரதத்தைப் பொறுத்தவரை  இங்கே இருக்கும் ஒவ்வொரு உயிரும் கடவுள் தான்..
அந்த தன்மையை அடைய அந்த உயிர், முயற்சி எந்த அளவு செய்கிறதோ அவ்வளவு தான் வித்தியாசம்..  எவ்வளவு மின்சாரம் கொடுத்தாலும்,எத்தனை ஸ்விட்ச்சில் கனெக்சன் கொடுத்தாலும் பல்பில் இருக்கும் சின்ன தொரு  tungsten filament சேர்ந்து  இருந்தால் தானே அந்த பல்ப் எரியும்..
அது போலதான் பிரபஞ்சமும் மனிதனும்..

சரி!,வாழும் வாழ்க்கையில் இத்தனை விஷயங்கள் அறிந்திருந்தானே, மரணத்தை மட்டும் அறியாமலா விட்ருப்பான்... ஆங்கலத்தில் death என்று சொல்லுவார்கள்.. அல்லது 'No more ' என்று சொல்லுவார்கள்.. டெத் என்றால் செயலிழந்துவிட்டது என்று அர்த்தம்.. இறந்தவன் செயலிழந்துவிட்டான் என்பது பொருழ்ல். ஆனால் நாம் சொல்வது.. 'உயிர் பிரிந்துவிட்டது' என்று.. அதாவது உடலிலிருந்து உயிர் தனியாகிவிட்டது.. ஆம்! உயிர் என்பது ஒரு தனிபட்ட பொருளற்ற தன்மை தான்.. அதை விளக்குவது கடினம். ஆனால், உயிர் பற்றி நிறைய நம் முன்னோர் அறிந்திருக்கிறார்கள் என்பதற்கு ஆதாரம் இருக்கிறது..
உயிர் போவது என்பது வயோதிகத்தலோ,நோயினாலோ, விபத்தினாலோ, தற்கொலையினாலும் போகும் என்பது மட்டும் கிடையாது.. இவை ஏதும் இல்லாமல் உயிரை துறந்தவர்கள் இருக்கிறார்கள்.. அதற்கு பெயர் 'சமாதி நிலை!'

தனக்கென சமாதி அமைத்துக்கொண்டு  குறிப்பிட்ட காலம் வந்ததும் அங்கே அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டு உயிரை துறப்பார்கள்!
ஞானம் அடைந்தவர்கள், தன்னை உணர்ந்தவர்கள் இறந்தபின் 'நம்மை தூக்கிப்போகும் சிரமம் இருக்கக்கூடாது என்று நினைத்து சமாதியாவார்கள்..  அதாவது எந்தவித சேதமும் இல்லாமல் தன் உடலிலிருந்து உயிரை பிரிக்கும் ஆற்றல் பெற்றிருந்தார்கள்.. இதற்கு உதாரணமாக 'ஸ்ரீ ராகவேந்தர் சுவாமி'களை சொல்லலாம்..
அவர் ஜீவசமாதி அடைந்த இடம் தான் 'மந்திராலயம்!

பாரதத்தில்,எங்கே எந்த இடத்தில் இப்படி அறிவியல் விஷயங்களை அறிந்தார்கள் என்று சரியாக தெரியாமல் போனாலும், இதை அதிகம் உணர்ந்தது தென்னிந்தியாவில் தான் என்று சொல்லலாம்..
கர்நாடகா,ஆந்திரா,கேரளா,தமிழ்நாடு   என்று பண்டைய ஆன்மீகம் பரந்து விரிந்திருந்தது.... நூற்றாண்டு கடந்தும் கம்பீரமாக இருக்கும் ஆலயங்களே இதற்கு உதாரணம்.. பஞ்சாங்கம்,ஆகம் விதிகள் போன்றபல நூல்களுமே இதற்கு சாட்சிகள்..

சரி! நான் உணர்ந்த சிவன் பற்றி சொன்னால் அது மிக சொற்பமானதே..
ஒரு பெளர்ணமி தின இரவில், வெறும் காலில், ஒரு ஊன்றுகோல் உதவியுடன், டார்ச் லைட் எடுத்துக்கொண்டு, கற்கள் பாறைகள் மீது ஏறி, 6000 மீட்டர் உயரம் அடைந்து, கடைசியாக செங்குத்தான ஒரு பகுதியை கவனமாக ஏறி உச்சி அடைந்து, மேகங்கள் உடலை தீண்டி போகும் காலை 6 மணிப் பொழுதில், கிழக்கில் சூரியோதத்தின் அற்புதம் கண்டு, சிவலிங்கத்தை வணங்கி, ஒரு பாறை மேல் அமர்ந்து கண் மூடி லயத்திருந்த தென் கைலாயம் என்னும் வெள்ளியங்கிரி மலையுச்சி கணங்கள்... அற்புதமானவை!

இறுதியாக, பாரதத்தில் கடவுள் விஷயத்தில் எந்த கட்டுபாடும் இல்லை.. மதமாக, மார்க்கமாக கடவுளை பார்க்கவில்லை ,யாரை வேண்டுமானாலும் வணங்கலாம், எந்த கடவுளையும் கும்பிடலாம், வீட்டிலும் கடவுளை வைத்திருக்கலாம்...புதிதாய் ஒரு முறையை உருவாக்கலாம்.. ஏன்.! நாத்திகனாக கூட இருக்கலாம்.. இறைவனை உணர்ந்தவன், உணராதவன் இரண்டு பேர் தான் இங்கே... எத்தகைய வாழ்க்கை வாழ்ந்தாலும் இறுதியில் சிவத்தோடு ஐக்கியமாவது தான் நம் முன்னோர்களின் ஒரே குறிக்கோள்..பாரதி பாடல் வரிகளில் 'மண்ணும் உயர் விண்ணும் அவன் ஒரு கைப்பிடியாகும்" என்று சிவனைப் பாடுகிறார்.. நிதர்சனமான உண்மை..

1 comment:

  1. மிக ஆழமான அருமையான பதிவு வாழ்த்துக்கள்.தொடரட்டும் உங்கள் ஆன்மீக எழுத்து பணி.

    ReplyDelete