நியூட்டன்_விஞ்ஞானப்பதிவுகள் (11) - twittor newton

Leave a Comment

அறிவியலும் சாதாரண மக்களும்

#நியூட்டன்_விஞ்ஞானப்பதிவுகள் (11)

சாக்லேட் சாப்பிடுவது கெடுதல் என்று சொல்லியிருப்பார்கள் உங்கள் உறவினர்கள்/நண்பர்கள். திடீரென்று ஒரு நாள் தினமலரிலோ அல்லது ஏதாவது பத்திரிகையிலோ சாக்லேட் சாப்பிடுவது இருதயத்துக்கு நல்லது என்று செய்தி வரும். காபி, உருளைக்கிழங்கு என்று பல விஷயங்களிலும் இது மாதிரித் தகவல்கள் மாறி மாறி வரும். இது போன்ற செய்திகள் எங்கிருந்து உருவாகின்றன.  “சன் செய்திகளுக்காகப் புதுக்கோட்டையிலிருந்து சரவணன்” என்று அரசியல் நிகழ்வுகளுக்கு நிருபர்கள் இருப்பது போல், அறிவியல் செய்திகளுக்கும் நிருபர்கள் இருக்கிறார்களா? அறிவியல் செய்திகள் எப்படி உருவாகின்றன. இதுதான் இந்த வாரம் பார்க்கப்போகிறோம். (எழுத நினைத்த சிறுகதை குறுநாவலாக நீண்டு கொண்டிருப்பதால் இந்த வாரம் கொஞ்சம் லைட்டான பதிவு)
::
சீரியசான விஞ்ஞானக்கண்டுபிடிப்புகள் இரண்டு வகைகளில் வெளியுலகத்திற்குத் தெரிய வரும். அந்த இரண்டு வகைகளைப் பார்க்கும் முன், எது சீரியசான விஞ்ஞானத்தில் சேர்த்தி இல்லை என்று பார்த்துவிடுவோம். இது தேவையில்லை என்பவர்கள் அடுத்தபத்திக்குத் தாவலாம். தினமலர், தினத்தந்தி போன்ற செய்தித்தாள்களில் அவ்வப்போது வரும் கண்டுபிடிப்புகள்: இளைஞர் கண்டு பிடித்த மின்சாரக்கார். பத்து பைசா மின்சாரத்தில் நூறு கிலோமீட்டர் ஓடும் போன்ற செய்திகளின் நம்பகத்தன்மை கேள்விக்குரியது. இது போன்ற இளைஞர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள்தாம். சந்தேகத்துக்கு இடமில்லை.  அவர்கள் வடிவமைத்த (கண்டுபிடித்த என்ற வார்த்தையை உபயோகிக்கவில்லை) அந்தக் காரைத் தயாரிக்க உழைப்பு, பொருட்செலவு இருந்திருக்கிறது. கைக்காசில் அல்லது தன் உடைமைகளை விற்றுக்கூட அவர்கள் இந்தக்காரை செய்திருக்கலாம். ஆனால், எது குறைபாடு என்று பார்த்தால் innovative step. இது...இதுதான் என் கண்டுபிடிப்பு. இது இல்லாவிட்டால் இப்படி ஒரு வாகனத்தை உருவாக்கி இருக்க முடியாது என்று தன் கண்டுபிடிப்பு பற்றிச் சொல்லத் தெரிந்திருக்க வேண்டும். சிலவேளை, இவர்களுக்கு அடிப்படை விஞ்ஞானம் தெரியாமல் இருக்கும்.
::
வடிவமைப்பது என்பது design. நீங்கள் கடையில் போய் ஒரு சோலார் பேனல் வாங்கி, பேட்டரி, மோட்டார் எல்லாவற்றையும் பொருத்தி ஒரு சோலார் காரை உருவாக்கினால் அது கண்டுபிடிப்பல்ல. இதில் நீங்கள் புதிதாக எதைக் கண்டுபிடித்தீர்கள் என்று கேட்டால், காரைக் கண்டுபிடித்தேன் என்பது பதிலாகாது. கண்டுபிடிப்பது என்பதில் innovative step இருக்கவேண்டும். அதாவது, இதுவரை அதை யாரும் கண்டுபிடித்திருக்கக் கூடாது. அதை எப்படிக் கண்டுபிடிப்பது? உலகத்தில் யாராவது கண்டு பிடித்திருப்பார்களே? நமக்கு எப்படித் தெரியும் என்றால், அதற்கு patent database பார்க்கலாம். முன்பு, சாதாரண மக்களுக்கு எட்டாக்கனியாக இருந்த patent database இப்போது கூகிள் பக்கத்திலேயே கிடைக்கிறது. Google patents என்று டைப் செய்து அதனுள் சென்று electric car என்று டைப் செய்தால் 1976இல் யாரோ ஒருவர் patent வைத்திருப்பார். எலக்ட்ரிக் கார் என்ற வார்த்தையுள்ள பேடன்ட்கள் 1.2 கோடி இருப்பதாக கூகிள் பேடன்ட்ஸ் சொல்கிறது. இது போன்ற patentகளில் இல்லாத எந்தப்புதுமை நம் கண்டுபிடிப்பில் இருக்கிறது என்று தெரிந்து நாம் அதை patent செய்யவேண்டும். சுயம்புவாக முளைத்த விஞ்ஞானிகளில் G.D. நாயுடு மட்டும் ஒரு விதிவிலக்கு. மற்றவர்கள் ராமர் பிள்ளை போல் ஒரு மேட்ச் ஆடிவிட்டுக் காணாமல் போய்விடுவார்கள்.
::
ஆக, முதலாவதாக சீரியசான கண்டுபிடிப்புகள் செய்பவர்கள் செய்ய வேண்டிய முதல் வேலை, தம் கண்டுபிடிப்பை patent செய்வதே (file a patent application). பெரிய பெரிய தொழில் நிறுவனங்களின் ஆராய்ச்சிக்கூடங்கள் கண்டுபிடிப்புக்குப் பின் செய்யும் முதல் வேலை இதுதான். பல்கலைக்கழகம், அரசு ஆய்வு நிறுவனங்கள் கூட பேடன்ட் செய்வார்கள். அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் தனி மனிதர்கள் கூட பேடன்ட் செய்வார்கள். ரூபிக் கியூப் பலரும் உபயோகித்திருப்போம். இதைக் கண்டுபிடித்த Rubik கூடத் தன் கண்டுபிடிப்பை பேடன்ட் செய்ததால் அதன் மூலம் கிடைத்த வருமானத்தில் பெரும் பணக்காரர் ஆனார். பேடண்ட்கள் பொதுவாக, அப்ளிகேஷன் சமர்ப்பித்த ஒன்றரை வருடம் கழித்துப் பொதுமக்கள் பார்வைக்கு வரும். இதன் மூலம் சில விஷயங்களை நாம் முன் கூட்டியே அறியலாம். உதாரணத்துக்கு, சேம்சங் நுகரும் தொழில்நுட்பத்தை பேடன்ட் செய்துள்ளது என்றால், அதன் வருங்கால போன்களில் நுகரும் தொழில் நுட்பம் வரலாம்.
::
இரண்டாவதாக, சீரியசான கண்டுபிடிப்புகள் செய்பவர்கள் செய்வது ஆய்வறிக்கை (research paper) சமர்ப்பிப்பது. கதை எழுதினால் அதைக் குமுதம், விகடன் போன்று பத்திரிக்கைகளுக்கு அனுப்புவோம் அல்லவா? அதேபோல் ஆய்வறிக்கையை வெளியிட journals இருக்கின்றன. இவை பத்திரிகைகள் மாதிரித்தான். ஆனால், பெரும்பாலும் விஞ்ஞானிகள், மற்றும் ஆராய்ச்சியாளர்கள் மட்டுமே படிக்கக்கூடியவை. சாதாரண மக்களுக்கு தீவிர இலக்கியம் எப்படி இருக்குமோ, அதுபோல் அறிவியல் தெரியாதவர்களுக்கு இதில் வரும் கட்டுரைகள் இருக்கும். ஒரு புலத்தில் வரும் கட்டுரைகளே, இன்னொரு புலத்தில் இருப்பவருக்குப் புரியாத புதிராக இருக்கும். புதிதாக அடியெடுத்து வைப்பவர்களுக்கு, நான்கு பக்கக் கட்டுரையைப் படித்தறிய நான்கு நாட்கள் கூட ஆகலாம். அதிதீவிர இலக்கியம் வகையைச் சார்ந்தது.
::
குமுதம், விகடனில் எதை வெளியிட வேண்டும், எதை நிராகரிக்க வேண்டும், எப்படி எடிட் பண்ண வேண்டும் என்று நிர்ணயிப்பதற்கு ஆசிரியர் குழு இருக்கும் அல்லவா? அதேபோல், இந்த விஞ்ஞான journalகளிலும் ஆசிரியர்கள் குழு (editorial team) இருக்கும். ஒரு வித்தியாசம் என்னவென்றால், குமுதம், விகடன் போல் editorial team எல்லாவற்றையும் தீர்மானிப்பதில்லை. சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரையை வெளியிடுவதா வேண்டாமா என்பதை editorial team தீர்மானிப்பது சாத்தியமில்லை. ஏனென்றால், விஞ்ஞான உலகம் மிகப் பரந்தது. ஒருவருக்கு ஒரு துறையில் இருக்கும் ஆழ்ந்த ஞானம், அடுத்த துறையில் இருக்காது. அதனால், editorial team-இனால் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரையின் நம்பகத்தன்மை போன்றவற்றைக் கணிக்க முடியாது. அதனால், ஓர் ஆராய்ச்சிக்கட்டுரை சமர்ப்பிக்கப்பட்டதும், அதை இரண்டு பேருக்கோ, அல்லது நாலைந்து பேருக்கோ கூட அனுப்புவார்கள். அந்த நாலைந்து பேர், அதே துறையில் பணிபுரிபவர்களாக இருப்பார்கள். அவர்கள் அதைப் படித்து நக்கீரன் போல செயல்படுவார்கள்.
::
குறைகள் இருந்தால் கட்டுரை எழுதியவர்களுக்குத் திருப்பி அனுப்பப்படும். திருத்தி மீண்டும் பரிசீலனைக்கு அனுப்பலாம். இதுபோல் ஒன்றோ இரண்டோ முறை பரிசீலனைக்குப் பிறகு கட்டுரை ஏற்றுக்கொள்ளப்படும் அல்லது நிராகரிக்கப்படும். ஏற்றுக்கொள்ளப்பட்ட பத்திரிகைகள் பிரசுரமாகும்.
::
இது போன்ற விஞ்ஞானப்பத்திரிகைகளில் Nature, Science போன்ற சில பத்திரிகைகள் முன்னணி வகிக்கின்றன. இதில் கட்டுரை வெளியிடுவதைப் பல விஞ்ஞானிகளும் பெருமையாக நினைப்பார்கள். இதற்கு அடுத்தபடியாக, பல்லாயிரக்கணக்கான பத்திரிக்கைகள் உள்ளன. கட்டுரை எழுதும் ஆசிரியர்கள் அவர்கள் துறைக்கு, கட்டுரையின் தகுதிக்கு ஏற்ற பத்திரிக்கையைத் தேர்ந்தெடுத்துப் பிரசுரம் செய்வார்கள். இந்தப் பல்லாயிரக்கணக்கான பத்திரிகைகளில் தற்போது சில காளான்களும் முளைத்து விட்டன. பணம் வாங்கிக்கொண்டு (publication costs – அச்சடிக்கச் செலவு என்ற ரீதியில்) கட்டுரைகளை வெளியிடும் நிறுவனங்களும் இப்போது வந்துவிட்டன.
::
Nature, Science போன்ற பிரபலப் பத்திரிகைகளில் ஒரு கட்டுரை வருகிறது என்று வைத்துக்கொள்வோம். அவர்கள் நியூஸ் ரிலீஸ் என்ற பெயரில் ஒரு சிறிய பிரசுரத்தை வெளியிடுவார்கள். Trappist பற்றிய சமீபத்தியப் பரபரப்பு Nature பத்திரிகை உண்டாக்கியதுதான். அந்தப் பிரசுரத்தை வைத்துக்கொண்டு சில நிருபர்கள் எழுதுவார்கள். சில நிருபர்கள், விஞ்ஞானிகளைப் பேட்டி கண்டு எழுதுவார்கள். பல சோம்பேறிகள் அந்தத் துண்டுப் பிரசுரத்தில் எழுதியிருப்பதை அப்படியே எழுதி விடுவார்கள்.
::
சில வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு கூத்தை, இந்த லிங்கில் சென்று (ஆங்கிலக்கட்டுரை) படிக்கலாம். httpp யில் உள்ள ஒரு p-யை எடுத்தால் லிங்க் வேலை செய்யும்.
:
httpp://io9.gizmodo.com/i-fooled-millions-into-thinking-chocolate-helps-weight-1707251800
::
இது கிட்டத்தட்ட ஒரு Tehelka டைப் ஜர்னலிசம். விஞ்ஞானம், குறிப்பாக nutrition (சாப்பாடு, ட்ரிங்க்ஸ்) பற்றிய துறைகளில் எவ்வளவு மடத்தனம் கலந்திருக்கிறது என்பதை நிரூபிக்க இந்தக் கட்டுரையின் ஆசிரியர் செய்த சில வேலைகள்:
1. ஒரு டம்மி ஆராய்ச்சி. ஆராய்ச்சியின் முடிவு: சாக்லேட் எடையைக் குறைக்கும் (இந்த முடிவுக்கு வர ஆராய்ச்சி போதுமானதல்ல என்று அவர்களுக்கே தெரியும்).
2. காசு வாங்கிக்கட்டுரை வெளியிடும் ஒரு பத்திரிகையில் பிரசுரம். (இரண்டு வாரத்துக்குள்)
3. செய்தித்தாள்களுக்குத் துண்டுப்பிரசுரம்: சாக்லேட் எடையைக் குறைக்கும் என்ற கவர்ச்சிகரமான விஷயம். எல்லோரையும் கவரும் செய்தி. செய்தித்தாள்கள்/வெகுஜனப் பத்திரிகைகள் இந்த நியூசை விடவா செய்வார்கள்.
::
அடுத்த சில நாட்களில் இந்தச் செய்தி சூடு பிடித்தது. பல செய்தி நிறுவனங்களும் இந்தச் செய்தியை வெளியிட்டன. சில நிறுவனங்கள், கவர்ச்சியான பெண்கள் சாக்லேட் சாப்பிடுவதைப் போலப் படங்களுடன்.
::
விஞ்ஞான உலகம் இது போன்ற போலிகளைக் கண்டு (பெரும்பாலும்) ஏமாறாமல் அது தன் போக்கில் சென்று கொண்டிருக்கிறது என்றாலும், இதனால் பாதிக்கப்படுவது பொது மக்கள்தான். காபி, குடிப்பதா வேண்டாமா? சாக்லேட் சாப்பிடுவதா வேண்டாமா என்ற குழப்பங்களுக்கெல்லாம் நான் விடை சொல்லமுடியாது. (என் பாணி: அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு)
::
கடைசியாக ஒரு கொசுறுச் செய்தி: சில வருடங்களுக்கு முன்பு கம்ப்யூட்டருக்கான ஹார்ட்டிஸ்க் (harddisk) பற்றி ஒரு செய்தி வந்திருந்தது. குழந்தை keyboardஇல் கை வைத்ததும் என் குழந்தைதான் அடுத்த ரஹ்மான் என்று பெருமைப்படும் சில பெற்றோர்கள் போன்றவர்கள் சில விஞ்ஞானிகள். இன்னும் வரவே வராத, அல்லது வரப்போகும் சாத்தியமே இல்லாத ஒரு தொழில்நுட்பத்தில் ஒரு குறிப்பிட்ட ரசாயனக்கலவையில் உப்பு சேர்க்கப்பட்டால் அது butterfly effectஇல் harddiskஇன் capacity-யைக் கூட்டும் என்று அறிவித்திருந்தார்கள். இந்தச் செய்தி சுற்றிச்சுற்றிக் கடைசியில் தினமலரில் “ஹார்ட்-டிஸ்க்குக்கு உப்பு நல்லது” என்று செய்தியாக வந்தது. நம்மூரில் எத்தனை பேர் ஹார்ட்-டிஸ்க் ஊறுகாய் போட்டிருப்பார்கள் என்று யோசிக்கிறேன்.

0 comments:

Post a Comment