நியூட்டன்_விஞ்ஞானப்பதிவுகள் (4) - twittor newton

Leave a Comment

TRAPPIST - part 3 of 4
.
.
பூமியைப் போன்ற கோள்களைக் கண்டுபிடித்தறியும் நாசாவின் தொலைநோக்கிகளை அலசிக்கொண்டிருக்கிறோம். நாசாவின் தொலைநோக்கிகளில் சிறப்பானவை ஆகாயத்தில் பறந்து இயங்கும் தொலை நோக்கிகள். அதிலும் குறிப்பாக, அகச்சிவப்புத் தொலைநோக்கிகள் (Infrared telescopes). பூமியிலிருந்து இயங்கும் தொலைநோக்கிகளை விட இந்த ஆகாயவெளி (space) தொலைக்காட்சிகளுக்கு சிறப்பான அம்சங்கள் உண்டு.
.
.
முதல் அம்சம், நிலத்தில் இயங்கும் தொலை நோக்கிகளுக்கு வரும் வெளிச்சம் காற்று மண்டலத்தால் பாதிக்கப்படுவது. மூடுபனி அல்லது புகை நிறைந்த ஒரு நாளில் நம் பார்வையின் வீச்சு குறைவு. அதுதான் பூமியில் இருந்து இயங்கும் தொலைநோக்கிகளின் ஒரு குறைபாடு. அது ஆகாயத்தில் இருந்து இயங்கும் தொலைநோக்கிகளான Kepler, Spitzer போன்றவற்றிற்குக் கிடையாது.
.
.
இரண்டாவது சிறப்பம்சம், அகச்சிவப்புத் தொலைநோக்கிகளில் தூசு போன்றவற்றால் நடக்கும் ஒளிச்சிதைவு குறைவு. அதனால், தெளிவு அதிகம்.
பூமியிலிருந்தும், ஆகாயத்திலிருந்தும் (Hubble, Kepler, Spitzer space telescopes) நாசாவின் தொலைநோக்கிகள் கோள்களின் தூரம், அளவு, போன்ற விஷயங்களை விஞ்ஞானிகளுக்கு அளித்துக்கொண்டிருக்கின்றன. குறிப்பாக, 2009-இல் அறிமுகம் கண்ட கெப்ளர்  (Kepler) தொலைநோக்கி மட்டுமே ஆயிரக்கணக்கான கோள்களைக் காட்டிக்கொடுத்திருக்கிறது. பள்ளியில் ஆசிரியர்களிடம் நம்மைப் போட்டுக்கொடுப்பவர்களைக் கோள் மூட்டி என்று சொல்வதைப் போல், கெப்ளரைக் கோள் காட்டி என்று சொல்லலாம். இந்தக் கோள்காட்டிகளின் வரிசையில் வந்த ஒன்றுதான்,ஏழு கோள்களைக் கண்டுபிடித்த Spitzer கோள்காட்டி.
.
.
TRAPPIST அமைப்பை முதலில் கண்டுபிடித்தது TRAPPIST என்ற கோள்காட்டி. இது நாசாவுடையதல்ல. இது தென்அமெரிக்க நாடான பெருவில் இயங்கும் ஒரு கோள்காட்டி. இதுதான் முதலில் TRAPPIST அமைப்பின் மூன்று கோள்களைக் கண்டுபிடித்தது. TRAPPIST என்ற பெயர் வரக்காரணமும் இந்தக் கோள்காட்டியால்தான். நாசாவின் சமீபத்தியக் கண்டுபிடிப்பு, (மைக்கேல் மதன காமராஜன் வசனம் போல) "எனக்கு ஏழு தெரியுது பாஸ்" என்று சொன்னதே.
.
.
TRAPPIST கோள்களைப் பற்றி மேலும் அறிய நாசாவின் இணைத்தளத்திற்குச் சென்றால் பல விஷயங்கள் கிடைக்கும். Appகளும் உள்ளன. அதனால், இங்கே, சில தகவல்கள் மட்டும் பகிர்கிறேன்.
.
.

TRAPPIST அமைப்பின் சூரியன், நம் சூரியனை விடச் சிறியது. வெப்பமும் ஈர்ப்புவிசையும் குறைவு. அதனால், TRAPPIST அமைப்பில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஏழு கோள்களும் அதன் சூரியனுக்கு அருகிலேயே சுற்றுகின்றன. நம் சூரியனுக்கு மிக அருகிலுள்ள கோள் Mercury. அதன் தூரத்தை விடப்பாதிக்கும் குறைவான தூரத்திலேயே இந்த ஏழு கோள்களும் சுற்றுகின்றன. (படத்தில் பார்க்கவும்) மேலும், அக்கோள்களுக்கு இடையேயுள்ள தூரமும் குறைவு. அதனால், ஒரு கோளிலிருந்து பார்க்கையில், மற்ற கோள்கள் நம் நிலவை விடப் பயங்கரப் பெரிதாகத் தெரியும். ஜோடி நிலவொன்று வேண்டும் என்று எழுதிய வைரமுத்து இங்குள்ள ஒரு கோளுக்குச் சென்றால் மிகவும் மகிழ்வார். ஐந்தாறு நிலவுகள் போலச் சுற்றியுள்ள கோள்கள் அழகாகத் தெரியும். (இதை எழுதும்போதே, எனக்கு அங்கு போகணும் போல இருக்கு)
.
..
(part 4 இன்னும் சற்று நேரத்தில் வரும்)

#

0 comments:

Post a Comment