பார்த்தவுடன் -ராகா...

Leave a Comment

பார்த்தவுடன் மனதிற்கு பிடித்துவிடும் அத்தனை அம்சங்களும் அந்த பெண்ணிடம் இருந்தது.

நெற்றியில் செந்தூரம் இட்டிருந்தாள். இந்துப் பெண் என்று ஊர்ஜிதப் படுத்திக் கொண்டேன். கால்களில் மெட்டியில்லை. நேர் வகுடெடுத்து வாரிய நெற்றியில் கும்குமம் இல்லை. இன்னும் திருமணமாகவில்லை என என் சிற்றறிவிற்கு எட்டியது. அவளின் இடப்புற சட்டை பாக்கெட்டில் அவள் பெயர் பொறிக்கப்பட்டிருந்தது. அந்தப் பெயர் என்னை எதோ செய்தது.

கழுத்தில் மாலையாக ஒரு ஸ்டெடஸ்கோப்பினை அணிந்திருந்தாள். அந்த மாலையும், அவள் நுனிநாக்கு ஆங்கிலம் கலந்த தமிழ் அவளை டாக்டர் என்று உணர்த்தியது. இடக் காதில் Lenova K4 Note போனை வைத்து ஒரு பக்கமாக சாய்ந்து பேசிக்கொண்டே எதோ எழுதிக் கொண்டிருந்தாள். LKG மாணவனுக்கும் புரியும் அவள் கையெழுத்து அவள் பிராக்டீஸ் செய்துக் கொண்டிருப்பதை சொல்லாமல் சொல்லியது.

ஹார்மோன்கள் அதிகமாய் சுரந்ததற்கான அறிகுறி அவளின் கன்னத்தில் முகப்பருவாய் காட்சியளித்தது. என்னை அறியாமல் ஒரு பெருமூச்சு !

அவள் முடி அவளின் முகப்பரு கன்னத்தை முத்தமிட்டது. அதை வளையலணிந்த கைகளால் ஒதுக்கி விட்டாள். பத்து விநாடிக்கொரு முறை கூந்தலை ஒதுக்கி விட்டுக் கொண்டே இருந்தாள். அது அவளின் மேனரிஸம்.

எங்கோ அந்த பெண்ணினை இதற்கு முன் பாத்திருக்கிறேன். பேசியிருக்கிறேன். ஆனால் அவள் என்னை  கண்டும் காணாதது போல் நடித்தாள்.

இவளை எங்கோ இதற்கு முன் நிச்சயமாக பார்த்திருக்கிறேன். எங்கே என்று தான் சட்டென ஞாபகம் வரவில்லை. அவளிடமே கேட்டு விடலாமா ? யார் நீ என்று கேட்டு விட்டால் ? எங்கே கொண்டு போய் என் மூஞ்சியை வைப்பேன் ?

வழக்கம் போல் அதிகாலை கனவில்லை இது. கிள்ளிப் பார்த்தேன் வலித்து சிவந்தது. எனக்கு ஜுரம் வந்து ஹாஸ்பிடலுக்கு வந்ததையே மறந்து விட்டேன். அந்த வராண்டா முழுவதும் பினாயில் வாசனை. அதையும் மீறி அவள் ஃபர்ப்யூம் வாசனை.

மறந்து விட்டேன் ! அவள் தோடு  அணிந்திருந்தாள். அது ஒரு செகண்ட் கோவில் ஆலய மணியை ஞாபகப் படுத்தியது. பரிச்சயமான ஒரு மங்கை தான் அவள். ஆனால் இப்போது அவளை பார்த்தால் பரிச்சயமில்லாதவள் போல் தெரிந்தது.

குறுகுறு பார்வை ஒன்று பார்த்தாள். அதில் ஒரு காதல் இருந்ததாக கற்பனை செய்துக் கொண்டேன். சிரித்தாள். அந்த சிரிப்பு  அவள் கன்னக்குழியில் என்னை விழச்செய்தது. 

யார் இவள் ? மீண்டும் அதே கேள்வி கேட்கிறது மனசாட்சி. எக்ஸாமில் கேட்கப்பட்ட கேள்விக்கு விடைதெரியதாவன் போல் நிற்கிறேன்.

இவளழகில் எனக்கு ஜூரம் வந்ததயே மறந்து விட்டேன். பட்டனை அமுக்கினாள். அது 'டிரிங் டிரிங்' என்று ஓசையை எழுப்பியது. நான் உள்ளே சென்றேன்.

"என்ன ஆச்சு ? "

"ரெண்டு நாளா ஒரே ஃபீவர்! மூச்சுக் கூட விட முடியல. தலைவலி. பசிக்கல. என்றேன். "

"என்ன தெரியுதா ? "

"எங்கயோ பாத்தா மாதிரி இருக்கு ஆனா எங்கன்னு தான் டக்குன்னு ஸ்டரைக் ஆகல. "

"நானும் உங்க ஸ்கூல்ல தான் படிச்சேன். "

"என் ஸ்கூல்லயா ? உங்க பேரு என்ன ? "

"ஹேமானிக்கா !"

சட்டென நீல வெள்ளை யூனிஃபார்மில், ரெட்டை ஜடை, ரோஜாவுடன் என் ஜூனியராய் கண்முன்னே தோன்றினாள் . என் பள்ளிபருவ  'Crush'  அவள். பள்ளிப் பருவமதில் அவள்  என்னை ஓரக்கண்ணால் பார்க்கும் போது, பகலில் கூட எனக்கு நட்சத்திரம் தெரியும். பகலிலும் நிலா வழிந்து வெற்றிடங்களை  நிரப்பும்.

"ஹேய் யூ ! எப்படி இருக்க ? பாத்து ரொம்ப நாள் ஆச்சு ! அதான் டக்குன்னு யாருன்னு கண்டுபிடிக்க முடியல ! சாரி 'டி'. "

என்னதான் நான் அவளுக்கு சீனியராய் இருந்தாலும் என்னை அவள் டா போட்டு தான் அழைப்பாள். எங்களிருவரின் அந்யோன்யம் அந்த டா/டி யில் தெரியும்.

"நான் நல்லா இருக்கன் டா ! இந்த ஹாஸ்பிடல்ல தான் பிராக்டீஸ் பன்னிண்டு இருக்கன். நீ எப்படி இருக்க ? "

"நான் நல்லா இருக்கன் ஹேமா ! "

"என்ன ஆச்சு டா உடம்புக்கு ? அவள் கேட்ட கேள்வி என் அம்மாவின்  பாசத்தையும் அக்கறையையும் ஒரு நிமிடம் ஞாபகப்படுத்தியது. "

"டிராவலிங் டி. தண்ணி , ஃபுட் ஒத்துக்கல."

"தண்ணீன்னா ? "

"தண்ணீன்னா தண்ணி தான். மினரல் வாட்டர் டி ! நீ நெனக்குற மாதிரி இல்ல. இன்னும் அந்தப் பக்கம் போறதுக்கு சான்ஸ் கெடைக்கல. "

"அந்தப் பக்கம் போனீனா கொண்ணுடுவன். இந்தா டேப்லட் சாப்பிட்டதுக்கு அப்புறம் போட்டுக்கோ. உன் பேஸ்புக் போஸ்ட் எல்லாம் பாத்துண்டு தான் இருக்கன். சீக்கிரம் தூங்கு. லேட் நைட் வரைக்கும் முழிச்சிண்டு இருக்காத. கண்டத யோசிச்சி உடம்ப கெடுத்துக்காத. "

"உன் நம்பர் சொல்லு .. "

"என் நம்பரை சொன்னேன். சரி நான் ஃப்ரீ ஆயிட்டு கால் பன்றன். பேஷண்ட்  நிறைய பேர் இருக்கா முடிச்சிட்டு கால் பன்றன். மாத்திரை சாப்பிட்டுட்டு தூங்கு ! ஏ.சி. போட்டுக்காத என்ன ? "

"சரி ! பை " என்று கூறி வெளியே செல்ல டோரை துறக்கும் போது கூப்பிட்டாள்.

"டேய் உன் போஸ்டுக்கு சொந்தக்காரி யாரு ? சிங்கிளா ? கமிட்டடா ? கண்ணம்மா யாராவது இருக்காளா ?"

அவளின் கேள்வியில் ஒரு ஆச்சர்யம் தெரிந்தது.

"ச்சீய்!  இன்னும் உன்ன மாதிரி எந்தப் பொண்ணையும் நான் இதுவரைக்கும் பாக்கல ! "

என்று கூறி அவளின் விடையை எதிர் பாராமல் அவ்விடத்தை விட்டு நகர்ந்தேன். அவளும்   என்னை காதலித்தாள். நானும் அவளை காதலித்தேன். ஆனால் இருவரும் ஒருவருக்கொருவர் காதலை வெளிப்படுத்திக் கொள்ளவில்லை.

வண்டியை ஸ்டார்ட் செய்யும் போது மொபைலில்  மெசேஜ் டோன் ஒலித்தது.கஷ்டமர் கேர் மெசேஜ் என்று தான் நினைத்தேன்.

அவள் ' Thanks da ! Me Too ! I Will Call U By Evening Love You. Take Care '  என்று அனுப்பியிருந்தாள்.

- ராகா

0 comments:

Post a Comment