நியூட்டன்_விஞ்ஞானப்பதிவுகள் (1) - twittor newton

Leave a Comment

(நீளமான பதிவு. நேரம் கிடைக்கும்போது மட்டும் வாசிக்கவும்)

விஞ்ஞானம் பற்றிய முதல் பதிவு இது என்பதால் விஞ்ஞானம் என்பது என்ன என்பதைச். சுருக்கமாகச் சொல்லிவிடுகிறேன். “இந்த உலகம் எப்படி இயங்குகின்றது?” என்ற கேள்விகளும், அக்கேள்விக்குக் கிடைக்கின்ற பதில்களுமே விஞ்ஞானத்தை வடிவமைக்கின்றன. உலகம் என்றால் உலகம் மட்டுமல்ல, பரவெளியிலிருந்து, அணுக்கள் வரை பல பொருள்களின், செயல்களின் காரணங்கள், விளைவுகளை அலசுவதே விஞ்ஞானம். அலசி ஆராய்வதில் பதில்கள் பெறப்படுகின்றன.  பதில்கள் தவறென நிரூபிக்கப்படுகையில், ஒத்துக்கொண்டு சரியான பதிலைத் தேடி ஓடும் ஞானமே விஞ்ஞானம். இதில் சுயம் (ego) கிடையாது. விருப்பு, வெறுப்புகள் முக்கியம் கிடையாது. உண்மை என்பது மட்டுமே முக்கியம்.

அறிவியல் எப்படி நிகழ்கிறது என்பதற்கு ஓர் உதாரணமாகச் சந்திர கிரகணத்தை எடுத்துக்கொள்வோம். கற்பனையில் பழங்காலத்துக்குச் செல்வோம். கிரகணத்தைப் பார்த்துப் பயந்த/வியந்த ஒரு சிறுவன் தன் தந்தையிடம் கேட்கிறான்: ”அப்பா, நிலாவுக்கு என்ன ஆச்சு?”. இப்படிக் காண்பதும் (observation) கேள்வி கேட்பதும் (questioning) அறிவியலின் முக்கிய அம்சங்கள். பல அறிவியல் சித்தாங்களின் ஆரம்பம் கேள்வி கேட்பதுதான். “ஆப்பிள் ஏன் கீழே விழுகிறது? ஏன்\ மேலே செல்லவில்லை?” என்ற கேள்வியை நியூட்டன் புவியீர்ப்பு விசை கண்டுபிடித்ததன் தூண்டுதலாகத் தெரிந்த உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம்.

இந்தக் காலத்தில் இப்படிப் பல கேள்விகளுக்கு google உதவியுடன் தேடினால் விடை கிடைத்துவிடும். கேள்விக்கு ஏற்கெனவே விடை இருக்கிறதா என்ற தேடுதல் அறிவியலின் முக்கிய அம்சம். Don’t reinvent the wheel என்பார்கள். அதாவது, சக்கரம் ஏற்கெனவே கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது. அதைக் கண்டு பிடித்து நேரத்தை வீணடிக்காதே என்பதே அதன் பொருள். Literature search / patent search போன்றவை விஞ்ஞான ஆராய்ச்சியின் முக்கிய அம்சங்கள். (Googleஇல் தேடுவதையே நிறைய research  செய்தோம் என்று தமிழ்த்திரையுலகினர் திரைப்படப் ப்ரோமோஷன்களில் சீரியசாகச் சொல்லிச் சிரிக்க வைப்பார்கள்). அது மட்டும் research அல்ல.
அந்தச் சிறுவன்/தந்தை காலத்தில் google இல்லை. ஊரில் யாருக்கும் பதில் தெரியவும் இல்லை. தந்தை யோசிக்கிறார். (உங்களுக்குப் பிடித்தால் தந்தை என்று வரும் இடங்களில் அம்மா/பாட்டி என்று கூட வாசித்துக்கொள்ளுங்கள். என்னை, ஆணியவாதி என்று சொல்லாதீர்கள் ).. “அதுவா, நிலாவைப் பாம்பு முழுங்கிடுச்சு” என்கிறார் தந்தை. பாம்பு முழுங்கி நிலா மறைந்திருக்கலாம்  என்பது ஓர் அனுமானம் (hypothesis). அச்சிறுவனின் தந்தையின் மூளையில், அவர் அறிவுக்கு எட்டிய வரையில், உதித்த சிந்தனை இவ்வளவே.
அனுமானம்/சிந்தனை அறிவியலின் இன்னொரு முக்கிய அம்சம். ஒரு நிகழ்வின் காரணம் இதுவாக இருக்குமோ என்று காரணங்களை வகைப்படுத்துதல் அறிவியல் வளர்ச்சியின் ஒரு முக்கிய அம்சம். அறிவியலின் அடுத்த நிலை, தந்தை (/பாட்டி) சொன்னது சரியா, தவறா என்று சோதிப்பது. அனுமானத்தைச் சோதிக்க வழியின்றியோ, மாற்றுக் கருத்து இல்லாத நேரத்திலோ இது போன்ற அனுமானங்களே பல சமயம் அறிவாக/ சாஸ்திரங்களாக எடுத்துக்கொள்ளப்பட்டன. நெடுங்காலமாக நம் ஊரில் கிரகணம் என்பது சந்திரனை ராகு/கேது என்ற இரு பாம்புகள் விழுங்கியதாகவே சொல்லப்பட்டிருக்கிறது. அறிவியல் என்பது அது போன்ற பழைய சித்தாந்தங்களில் தங்கி விடாது, கூடியவரை உண்மை எதுவோ அதை நோக்கி நகர்வதே. தற்போதைய விஞ்ஞானம், சந்திர கிரகணம் என்பது சந்திரன் மேல் விழும் பூமியின் நிழல், அதனால் நிகழும் இருட்டு என்று சொல்கிறது.

ஆதி காலம் தொட்டே அறிவியல் இருந்திருந்தாலும், அறிவியல் அளவு கடும் வளர்ச்சி கண்டதென்னவோ கடந்த இரு நூற்றாண்டு காலங்களில்தான். குறிப்பாக இருபதாம் நூற்றாண்டின் முதல் பாதி பிரமிக்கவைக்கும் கண்டுபிடிப்புகளைக் கொண்டது. “WTF, எப்படில்லாம் யோசிச்சிருக்காங்க” என்று விஞ்ஞானிகளே விஞ்ஞானிகளைப் பார்த்துப் பிரமிக்கும் காலகட்டம் அது. குவாண்டம் மெகானிக்ஸ் (quantum mechanics), ரிலேடிவிட்டி (relativity) சித்தாந்தங்களைப்போல் (theories) மிரளவைக்கும் கண்டுபிடிப்புகள் அத்தனை குறுகிய காலத்தில் இனி வருமா என்றால் சந்தேகமே. அணு பற்றிய பல உண்மைகளும், மின்னணுவின் (electron) அலைத்தன்மையும் (wave-particle duality) அதன் மூலம் நாம் உணர்ந்த பல புதிய தகவல்களும் மனித அறிவை மேம்படுத்தியதோடு மட்டுமின்றி, நம் வாழ்வையும் மேம்படுத்தின.
சென்ற நூற்றாண்டின் முதல் பாதி அறிவியலின் பொற்காலம் என்றால், இரண்டாம் பாதியைத் தொழில் நுட்பத்தின் பொற்காலம் எனலாம். ட்ரான்சிஸ்டர் (transistor) தொழில் நுட்பம் வளர்ந்து சிலிகான் சில்லுப் புரட்சி (revolution of integrated circuits) உண்டானது. கம்ப்யூட்டர் நம் வாழ்வின் முக்கிய அம்சமானது. கிட்டத்தட்ட இந்தக்காலத்தில்தான் சுஜாதா எழுதி வந்தார்.

சுஜாதா போன்றதோர் எழுத்தாளர் நமக்குக் கிடைத்தது அதிர்ஷ்டம் என்றாலும், இந்தக் காலகட்டத்தில் எழுத்தாளராக இருந்தது சுஜாதாவின் அதிர்ஷ்டம் எனவும் சொல்லலாம். ஹோலோகிராபியை (holography) மையமாக வைத்துக் “கொலையுதிர்காலம்”, ஹிப்னாடிசம்/brainwashing போன்ற சமாச்சாரங்களை வைத்து “நில்லுங்கள் ராஜாவே”, voice recognition-ஐ மையமாக வைத்து ஒரு கதை, image recognition-ஐ மையமாக வைத்து இன்னொரு கதை (பெயர்கள் மறந்து விட்டன), robotics-ஐ மையமாக வைத்து “என் இனிய இயந்திரா”, என்று பல நூல்களை அவர் எழுத முடிந்தது. கம்ப்யூட்டர் பற்றியும், மின்னணுவியல் (electronics) பற்றியும் அவர் ஏற்படுத்திய விழிப்புணர்வு பல தமிழர்களுக்கு வாழ்வளித்தது. IT துறை இந்தியாவில் காலடி எடுத்துவைத்த காலத்தில், சுஜாதாவின் எழுத்துக்களால் நிகழ்ந்த மாற்றங்கள் தமிழர்களுக்குப் பெரிதும் உதவியது.

இந்த நூற்றாண்டின் அறிவியல்/தொழில் நுட்பம் விசித்திரமானது. மாரத்தான் ஓடுபவனின் கடைசி சில மைல்கள் போன்று கடினமானது. Transistor கண்டுபிடித்தவர் யாரென்று கேட்டால் ஷாக்லி என்று பலரும் சொல்லி விடுவார்கள். ஆனால், இந்தக்காலத்தில் இதைக் கண்டுபிடித்தவர் இன்னார் என்று குறிப்பாகச் சொல்ல முடியாதபடி பலரின் உழைப்பு கலந்திருக்கிறது. புதிதாக வளரும் தொழில்நுட்பங்கள் கூட, அதை வைத்து சுஜாதா போல ஒரு கதை எழுத முடியாது என்ற அளவிற்கு சிக்கல் நிறைந்து (complex) இருக்கின்றன.

கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில் சில சென்டிமீட்டர்கள் அளவிருந்த transistor, இப்போது சில நானோமீட்டர்களுக்குச் சுருங்கிவிட்டன. (நானோமீட்டர் என்பது ஒரு மில்லி மீட்டரில் பத்து லட்சத்தில் ஒரு பங்கு = 10-9 m) மயிரிழையைப் பத்தாயிரம் துண்டுகளாகக் கீறினால் அதில் ஒரு துண்டு எத்தனை சிறியதாக இருக்குமோ, கிட்டத்தட்ட அந்த அளவில் இருக்கின்றன தற்போதைய transistorகள். இதை இன்னும் எப்படிச் சிறியதாக ஆக்குவது என்று விழித்துக்கொண்டிருக்கிறது தொழில்நுட்ப உலகம். சிறியதாக ஆக்க முடிந்தாலும், சிறிதாக ஆக்கியதால் வரும் பிரச்னைகள் என்று வேறு உண்டு. இதுபோலப் பல துறைகளும் வேகமாக ஓடி முன்னேறி வந்து இப்போது மூச்சிரைத்துக் கொண்டிருக்கின்றன. எனக்குத் தெரிந்த வரை இந்த விஷயங்களை randomஆக அவ்வப்போது எழுதுகிறேன். அறிவியலை எளிமைப்படுத்தி எழுதுவதில் சில பிரச்னைகள் உண்டு. அறிவியல் நன்கு அறிந்தவர்களுக்குப் பிடிக்காமல் போகும். மேலும், புரிதலில் சிறு பிழைகள் ஏற்படும். அதை மன்னித்தருளுங்கள்.

முடிவை நெருங்குவதால் ஒரு கதை. PhD முடித்து முனைவர் பட்டம் பெறப்போகும் தருவாயில் உள்ள ஒரு மாணவனின் இறுதித்தேர்வு அது. அவன் தன் ஆராய்ச்சியைப் பற்றிப் பேசப்பேச, அதைக் கேட்டுக் கொண்டிருக்கும் ஆய்வாளரின் முகம் இறுகிக்கொண்டே வருகிறது. அவன் சொல்வது உண்மையானால், அந்த ஆராய்ச்சியாளர் நாற்பது வருடங்களாகச் செய்த ஆராய்ச்சி எல்லாம் உண்மையல்ல என்று ஆகிவிடும். அந்த மாணவனின் வழிகாட்டியும், மாணவனும் பயம் பாடி, தன்னம்பிக்கை பாதி கலந்து செய்த கலவையாக இருக்கிறார்கள். மாணவன் பேசி முடித்ததும், ஆய்வாளர் பல கேள்விகள் கேட்கிறார். வழிகாட்டிக்கோ “மாணவன் தோல்வி அடைந்து விடுவானோ?” என்று கொஞ்சம் பயம். கேள்விகள் கேட்டுக் களைத்த ஆய்வாளர் மாணவனிடம் சென்று, “Congratulations”. நீ ஜெயித்து விட்டாய். என் கருத்துக்கள் தவறென்று உறுதியாகி விட்டன என்று வாழ்த்துகிறார். தான் தோற்றாலும் பரவாயில்லை, சரியான கருத்து வெல்ல வேண்டும் என்று நினைத்த அவர்தான் நிஜமான விஞ்ஞானிகளின் பிரதிநிதி.

#நியூட்டன்_விஞ்ஞானப்பதிவுகள் (1)

0 comments:

Post a Comment