காந்தி ஜெயந்தி - சிறுகதை -twittor newton.

Leave a Comment

(இணையத்தில் நான் பதிவிடும் என் முதல் கதை)

                         காந்தி ஜெயந்தி
:::
அக்டோபர் 2, 2016. உறவினர்கள், நண்பர்கள் என்று வீட்டில் ஒரே கூட்டம்.
::
பெரிய கவலை ஏதும் இல்லை. ஆனாலும், கவலைப்படுவது போல் முகத்தை வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தேன்.
::
"காந்தி பக்தர். அதனாலதான் காந்தி ஜெயந்தி அன்னிக்குப் போய்ச் சேர்ந்திருக்கார்" ஆறுதல் சொல்வதாய் நினைத்து மேதாவித்தனத்தைக் காட்டினார் தந்தையின் நண்பர். அவர் முன்னால் ஒரு முறை அசிங்கப்பட்டது நினைவிற்கு வந்தது.
::
நம்ம நண்பர்கள் எல்லாரும் ஜாலியாத்தான் இருக்காங்க. "நம்ம அப்பா மட்டும் ஏன் இப்படி" என்று பல முறை யோசித்திருக்கிறேன். நம்மளைத் தத்து எடுத்திருப்பாங்களோ? அம்மாவிடம் ஒரு முறை கேட்டபோது, கட்டியணைத்து அழுதார். இன்னொரு முறை, வயிற்றில் இருக்கும்போது எடுத்த அல்ட்ராசவுண்ட் ஸ்கேனில் இருந்து வரிசையாக எல்லா போட்டோக்களையும் எடுத்துக் காண்பித்தார். "அப்பா, உன்னோட நன்மைக்குத்தான்டா கண்டிப்பா இருக்கார்"னு அம்மா சொன்னாலும் அது மனதில் பதிந்ததில்லை.
::
டிகிரி படிக்கும்போதே லீவு நாட்களில் கம்பெனிக்குக் கூட்டிட்டுப் போயிருக்கிறார். கருணாகரன் B.E. என்று கதவுகளில் பொன்னெழுத்துக்களால் ஆன பெயர்ப்பலகை. கண்ணாடி அறை. மிதமான AC. இண்டர்காமில் கூப்பிட்டதும் ஓடி வரும் செக்ரெட்டரி. BE படிச்சுட்டு இத்தனை அலப்பரையா என்று நினைக்கும்போதே "அந்தக்காலத்து B.E. நான் படிக்கிற காலத்துல தமிழ்நாட்டிலேயே அஞ்சு இஞ்சினியரிங் காலேஜ்தான் இருந்தது. மெரிட்ல கிடைச்ச சீட். அதுவும் MIT" என்பார். பெரிய MIT. என்னவோ Boston MITன்னு நினைப்பு. இது டுபாக்கூர் அண்ணா யுனிவர்சிடி MITதானே.
::
"சுதீப், இவர் அண்ணாமலை. அப்பாவோட கல்லூரி நண்பர். MIT காலத்தில் இருந்தே அப்பாவோட தோஸ்த்" என்ற குரல் கேட்டதில் நினைவு கலைந்தது. "வணக்கம்" என்றேன். பதிலுக்கு வணக்கம் சொன்ன அண்ணாமலை "என்ன நடந்தது?" என்றார். "ஹார்ட் அட்டாக். இதுக்கு முன்னாடியே ரெண்டு முறை வந்திருக்கு. ஆனால், இந்த முறை திடீர்னு ஆயிருச்சு".
::
அம்மாவிடம் ஒரு முறை “Boston, Cambridgeல இருக்கிறதுதாம்மா உலகப்புகழ்பெற்ற MIT. அது Massachusetts Institute of Technology. இது மெட்ராஸ் இன்ஸ்டிட்யுட் ஆப் டெக்னாலஜி.  இந்த MIT யை வெளி நாட்டில் போய்ச்சொன்னால் தெரியாது” என்றபோது அம்மாவுக்குக் கோபம் வந்து விட்டது. “டேய், இதுலதான்டா சுஜாதா, அப்துல் கலாம்லாம் படிச்சாங்க” என்று சொன்னார். அதன் பிறகு அதைப்பற்றி அம்மாவிடம் அதிகம் பேசுவதில்லை. அம்மா மனசு நோகுவது அவனுக்குப் பிடிக்காது. ஆனால், அப்பாவோ வேறு ரகம். கொடுமைக்காரர்.
::
கம்பெனிக்குக் கூட்டிட்டுப் போன முதல் நாள் செக்ரேட்டரியைக் கூப்பிட்டு, “This is Sudeep. இப்ப, ஒரு மாதம் லீவுலதான் இருப்பான். தொழில் கத்துக்கட்டும்னு கூப்பிட்டுட்டு வந்தேன். அடுத்த ஒரு மாதம் இங்கேதான். பேக்டரி ப்ளோர்ல மாணிக்கத்துக்கிட்ட வேலை கத்துக்கச் சொல்லுங்க” என்றபோது திகைத்து விட்டேன். நம்ம கிட்டே சொல்லவேயில்லை. கூட்டிட்டு வரும்போதே சொல்லியிருக்கலாமே. வரமாட்டேன்னாவது சொல்லியிருக்கலாம். கொடைக்கானல் போகணும்னு ப்ளான் பண்ணியிருக்கோமே என்று தோன்றினாலும், செக்ரெட்டரி முன் பேசப்பயம். அவ முன்னாடி ஏதாவது சொல்லிட்டா வம்பாயிரும்.
::
அது பேட்டரி தயாரித்து சப்ளை செய்யும் ஒரு பேக்டரி. பெரிய பேட்டரி நிறுவனங்கள் இவற்றை வாங்கி அவற்றின் லேபலை ஓட்டி விற்பனை செய்துகொள்ளும். பேக்டரி ப்ளோரில் ஒரே கெமிகல் ஸ்மெல். இதிலெல்லாம் எப்படி இந்த ஆட்கள் வேலை செய்கிறார்களோ என்று தோன்றியது. மாஸ்க், கிளவ்ஸ் எல்லாம் அணிந்து கொண்டு அங்கு நடக்கும் வேலைகளை எல்லாம் கவனித்தேன். முதல் நாள் வேலை முடிந்ததுமே, அப்பா பிசினசை நாம எடுக்கக்கூடாது. சினிமா தயாரிக்கணும். கொஞ்ச நாள்ல முடிஞ்சா நடிப்பு, டைரக்ஷன் அப்படியே போயிடணும். இந்த ஒரு வாரம் மட்டும் வந்துட்டு, அடுத்த வாரம் கோடைக்கானலுக்கு ஓடிப் போயிடணும்.
::
அடுத்த வாரம் கோடைக்கானல் போகலாமா என்று கேட்டபோதும் அப்பா விடவில்லை. தொழில் கத்துக்கோ. அடி மட்டத்தில் இருந்து எல்லாமே தெரிஞ்சவனாலதான் நல்லா மேனேஜ் பண்ண முடியும். இல்லன்னா, ஏமாத்திருவாங்க என்றார். நண்பர்கள் கிண்டல் செய்தார்கள். நீ சரியான பயந்தாங்கொள்ளிடா என்றனர். சிறு வயதில் இது போல் நிறைய மிஸ் பண்ணியிருந்தாலும், இந்த முறை வருத்தத்துடன் கோபமும் அதிகமாயிருந்தது. ஆனாலும், என் பொருமல் எப்போதுமே என் மனதிற்குள்தான். வீட்டிற்குள் புரட்சி எல்லாம் செய்யப் பயமா என்னவென்று தெரியாது. செய்ததில்லை.
::
“தம்பி, டைரக்டர் ராஜ்குமார்” என்ற குரல் கேட்டது. “வணக்கம் சார்” என்றேன்.
::
“அப்பாவை நல்லாத் தெரியும். உங்களை என்னிடம் அசிஸ்டெண்ட்ஆகச் சேர்க்கணும் என்று பல முறை சொல்லிருக்கிறார்”
::
இதையெல்லாம் நம்ம கிட்டே அப்பா சொல்லவேயில்லையே. பரவாயில்லை. அவர் செஞ்ச வேலைலையே இது ஒண்ணுதான் உருப்படி என்று நினைத்தேன்.
::
கல்லூரிக்கால விடுமுறை தோறும் வீட்டில் யுத்தமே நடக்கும். யுத்தம்னா என்ன, மனசுக்குள்ளேதான். இந்த முறை பேக்டரிக்குப் போக முடியாதுன்னு தைரியமாச் சொல்லிடணும்னு நினைப்பேன். யார் கிட்டேயாவது இந்த ஒரு மாச லீவுலயாவது அசிஸ்டென்ட் டைரக்டரா வேலை பண்றேம்பா என்று கேட்டாலும் விட்டதில்லை. சினிமா என்ன சினிமா. நம்ம குடும்பத் தொழில் இதுதான். இதுதான் உனக்கு நல்ல வரும். போ என்பார். போய் நிற்பேன். எரிச்சல் வந்தாலும், வேலை பார்ப்பேன். வேலை ஓரளவு கற்றும் கொண்டேன்.
::
UG முடித்ததும் சினிமா ஆசையைச் சொன்னேன். MBA படிக்க அனுப்பி வைத்தார். படிப்பு, இன்டர்ன்ஷிப் என்று மூன்று வருடம் அமெரிக்காவில் இருந்தும் சினிமா ஆசை போகவில்லை. வந்து சேர்ந்த சில நாட்களில் இப்போது இந்த இடத்தில் நான். அவர் இல்லை. என் இஷ்டப்படி நடக்கலாம். பேட்டரி பேக்டரியை வித்துட்டு சினிமா தயாரிக்கணும். அம்மாவை நினைத்தால்தான் பாவமாக இருந்தது. அழுகை வந்தது. அழாதே என்று தேற்றிய உறவினர்கள், நண்பர்கள் கூட்டம் ஈமக்கிரியைக்குப் பின் கரைந்தது.
::
அம்மாவைத் தேற்றி, இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிக்கொண்டிருந்த போது பேக்டரியை விற்க முயற்சி செய்தேன். முடியவில்லை. மோடி அறிவித்திருந்த demonetization காரணமாக பணத்தட்டுப்பாடு. யாரும் வாங்க முன் வரவில்லை. டைரக்டர் ராஜ்குமாரைச் சந்தித்து அசிஸ்டென்ட் டைரக்டராகச் சேர்ந்தேன்.
::
ஜனவரி 30, 2017. அப்பாவின் லாயரிடம் இருந்து போன் வந்தது. அப்பா ஒரு கவர் கொடுத்திருப்பதாகச் சொன்னார். “ஒவ்வொரு வருடமும் அக்டோபர் இரண்டாம் தேதி இந்தக் கவர் கொடுப்பார். தான் இறக்கும்படி நேர்ந்தால், அந்த வருடம் ஜனவரி 30 அன்று இந்தக் கவரை உங்களிடம் கொடுத்து விட ஏற்பாடு செய்திருந்தார். என்னவோ, அவருக்கு காந்தி மேல் அப்படி ஓர் ஈடுபாடு” என்றார்.
::
வீடு வந்ததும் மூடியிருந்த கவரைப் பிரித்தேன். பெருசா ஒண்ணுமில்லை. ஒரு லெட்டர் மட்டும். பிரித்து வாசிக்க ஆரம்பித்தேன். “அன்புள்ள சுதீப், கடந்த ஐந்து வருடங்களாக மரணம் எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்ற மனநிலையிலேயே வாழ்கிறேன்” என்று ஆரம்பித்துப் பல விஷயங்கள் எழுதியிருந்தார். பேக்டரிக்கு அனுப்பியதன் காரணம், சினிமாவுக்கு அனுப்பாததன் காரணம் எல்லாம் எழுதியிருந்தார். முதன்முறையாக அப்பா மேல் கொஞ்சம் மதிப்பு வந்தது. அவர் பக்க நியாயமும், ஸ்ட்ரேட்டஜியும் புரிந்தது. கடைசியில் “திரைப்பட உலகத்திற்குச் செல்லப் பணம் தேவைப்படும். பெரும்பாலும், blackஇல் இயங்கும் உலகமது. உனக்காக நாற்பது கோடி சேர்த்து வைத்திருக்கிறேன்” என்று அதை ஒளித்து வைத்திருந்த இடத்தையும் எழுதியிருந்தார்.
::
அவசர அவசரமாக ஓடினேன். கறுப்பு நிறத்தில் ஒரு சூட்கேஸ். பூட்டைத் திறந்து உள்ளே பார்த்தேன். கத்தை கத்தையாக ஐநூறு ரூபாய், ஆயிரம் ரூபாய் நோட்டுக்களில் காந்தி சிரித்துக் கொண்டிருந்தார். அத்தனையும் பழைய நோட்டுக்கள்.

0 comments:

Post a Comment