நியூட்டன்_விஞ்ஞானப்பதிவுகள் (3) - twittor newton

Leave a Comment

TRAPPIST - Part 2
.
(முதல் பாகத்திற்கான லிங்க் கமெண்டில்.மீதி இரண்டு பாகங்கள் நாளை வரும். நன்றி)
.
Telescope எனப்படும் தொலைநோக்கியைக் கண்டு பிடித்தவர் கலிலியோ என்பது பலருக்கும் தெரியும். வெறும் இரண்டு வில்லைகள் (lense) மட்டுமேயுள்ள அது போன்றதொரு தொலைநோக்கியை, இந்தக் காலத்தில் சாதாரண மக்கள் கூட வாங்கி உபயோகப்படுத்திவிட முடியும். தூரத்தில் இருக்கும் கோள்களைப் பெரிதாக ஆக்கிக்காட்டுவது மட்டுமே அதன் குணம். ஆனால், வாழத்தகுந்த ஒரு கோளைக் கண்டுபிடிப்பதற்கு இன்னும் வேறு சக்திகள் உள்ள தொலைநோக்கிகள் தேவை. Trappist, Spitzer போன்ற தொலைநோக்கிகளுக்கு என்னென்ன சக்திகள் வேண்டும் என்று பார்க்கும் முன் நாம் வாழும் பூமியையும் அதன் குணாதிசயங்கள் பற்றியும் உள்நோக்கிப் பார்த்து விடுவோம்.
.
.
பூமி ஒரு விசித்திரமான உலகம் (அட, விசித்திரமான வாக்கியம்). பூமிக்கு சற்று இந்தப்பக்கம் சூரியனை நோக்கிச் சென்றால், மெர்குரி, வீனஸ் என்ற இரண்டு கோள்கள் உண்டு. சூடு அதிகம். எவ்வளவு சூடு என்று கேட்டால் குத்துமதிப்பாக ஈயத்தை உருக்குமளவு (அதை விட அதிகம்) என்று சொல்லலாம். அங்கு நம்மால் வாழ முடியாது. சூரியனை விட்டுத்தள்ளி எதிர் திசையில் சென்றால் செவ்வாய் (Mars) மற்றும் பிற கோள்கள். அவைகளில் கடும் குளிர். ரத்தம் உறைந்து விடும். அங்கும் வாழ முடியாது. பூமியில் மட்டுமே வெப்பநிலை மனிதர்களும், பிற உயிரினங்களும் வாழமுடியும் அளவிற்கு இருக்கிறது.
.
.
பூமியின் மற்றொரு சிறப்பம்சம் அதன் எடை. ஒரு கோளின் ஈர்ப்பு விசை அதன் எடையைப் பொறுத்தது. காற்று ஒரு கோளை விட்டு ஓடிடாமல் (பறந்து விடாமல்?) இருக்க, ஒரு கோளுக்குக் குறிப்பிட்ட எடை இருக்கவேண்டும். நமக்குத் தேவையான காற்றைப் பிடித்து வைத்திருப்பது பூமியின் எடை காரணமான புவிஈர்ப்பு விசைதான். ஒரு மாறுதலுக்காக, நம் நிலவை எடுத்துக்கொண்டால் அதன் எடை குறைவு. அதன் காரணமாக, அதன் ஈர்ப்புவிசையும் குறைவு. அதனால், நிலவில் காற்றுக்கூடக் கிடையாது. 
.
.
பூமியின் மூன்றாவது சிறப்பம்சம் தண்ணீர். நீரும், காற்றும் உயிர்வாழத் தேவையான அம்சங்கள். நம் பூமியில் இது வரை, இவ்விரண்டுக்கும் பெரிய பிரச்னையில்லை. இயற்கை வளங்கள், எரிபொருட்கள் போன்ற அம்சங்கள் எல்லாமே நமக்கு அமைந்த போனஸ் வரங்கள். 
.
.
பூமி போன்ற கோள்களைத் தொலைநோக்கும் முயற்சியில் நாசாவுக்கும் லிஸ்ட் உண்டு. வாடகைக்கு ஒரு வீடு பார்க்கச் செல்கையில், ஒரு லிஸ்ட் போட்டு (தண்ணி, பள்ளிக்கூடம், பஸ்/பார்க்கிங் வசதி, etc) வாடகைக்கு எடுப்பது போல், தண்ணீர் இருக்கிறதா, வெப்பம் சரியான அளவில் இருக்கிறதா என்பதையெல்லாம் நாசாவின் தொலைநோக்கிகள் கண்டுபிடிக்க வேண்டும். குறிப்பாக, அருகிலுள்ள நட்சத்திரத்திலிருந்து அந்தக் கோள் (exoplanet) எவ்வளவு தூரத்தில் இருக்கிறது என்பதைக் கண்டறிவது நாசாவின் தொலைநோக்கிகளின் முக்கிய வேலை.

(part 2/4)

#நியூட்டன்_விஞ்ஞானப்பதிவுகள்  (3)

0 comments:

Post a Comment