நியூட்டன்_விஞ்ஞானப்பதிவுகள் (2) -twittor newton

Leave a Comment

TRAPPIST - Part 1

.
சிங்கப்பூரில் எண்பது விழுக்காட்டு மக்கள் அரசு வாரியத்தால் (HDB) கட்டப்பட்ட வீடுகளிலேயே வாழ்கிறார்கள். திருமணமாகாத ஆணோ, பெண்ணோ இந்த வீடுகளை வாங்க முடியாது என்றொரு சட்டம் நெடுங்காலமாக இருந்தது. தம்பதிகள் மட்டுமே வீடு வாங்க முடியும் (இப்போது அப்படி இல்லை.). அதனால் சிங்கப்பூர் ஆண்கள் “நாம் இருவரும் இணைந்து வீடு வாங்கலாமா?” என்று கேட்பதே, “நாம கல்யாணம் கட்டிக்கலாமா?” என்பதன் சிங்கப்பூர் version என்றொரு நகைச்சுவையும் உண்டு. அரசு வாரிய வீடு என்றவுடன், நம்மூர் ஹவுசிங் போர்டு வீடுகள் போல அழுக்கான கட்டடங்களைக் கற்பனை செய்யவேண்டாம். இந்தியாவின் தனியார் வீடுகளை விடப் பெரும்பாலும் அழகாகவே இருக்கும். வாங்கிய பழைய/புதியவீட்டை, திருமணமான தம்பதிகள் தாஜ்மஹால் அளவுக்கு அலங்காரம் செய்து ஐந்தாறு வருடங்கள் வாழ்வார்கள். அதற்குள் வீடு பழசாகி விடும். வாழ்வதற்கு வேறு ஒரு வீடு பார்த்து அதை renovate செய்து (புதுப்பித்து) அதில் குடி புகுவார்கள். (வீட்டில் இருந்துகொண்டே புதுப்பிப்பது கடினம் என்பது ஒரு காரணம். வீட்டை விற்று வேறு வீடு வாங்குவதில் லாபம் கிடைக்கும் என்பது இன்னொரு காரணம்).
.

Trappist பற்றித் தமிழில் எழுதுமாறு முகநூல் நண்பர் பாண்டியன் சிவா கேட்டபோது, மேலுள்ள உதாரணம்தான் என் நினைவுக்கு முதலில் வந்தது. அந்த சிங்கப்பூர்த் தம்பதிகள் தாம் வாழ்ந்த வீட்டைப் பழையதாக்கிவிட்டு வேறு வீடு தேடும் வேலையைத்தான் நாமும், நாம் வாழும் உலகில் செய்து கொண்டிருக்கிறோம். காற்றை மாசுபடுத்தி நோய்களைப் பெருக்கி விட்டோம். Global warming எனப்படும் வெப்பநிலை அதிகரிப்பால், கடலோர நகரங்கள் அழிவு, சீதோஷ்ண மாற்றங்கள் என்று பிரச்னைகள் வருகிறது. மரங்கள் பல அழித்துவிட்டோம்.  ஆறுகளை அழுக்காக்கி விட்டோம். தண்ணீர் விற்கப்படுகிறது. இப்படியே போனால், நம் பூமி வாழத்தகுந்ததாக இருக்காது என்று வேறு பூமி இருக்கிறதா என்று தேடுகிறோம், புதிய வீடு தேடும் சிங்கப்பூரின் இளம் தம்பதியினரைப் போல். மனிதர்கள் வாழத்தகுந்த கிரகங்களைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் NASA இருக்கிறது.
.

வேறு உலகம் என்பது எங்காவது இருக்கும். அங்கும் மனிதர்கள் இருப்பார்கள் என்ற நம்பிக்கை பழங்காலம் தொட்டேயிருக்கிறது. ஈரேழுலகம் என்பது தமிழில் இன்னும் வழக்கத்திலுள்ள ஒரு வார்த்தை. இதைக் கற்பனையான விஷயமாக நம் முன்னோர்கள் சொல்லியிருந்தால் கூட இந்த எண்ணம் பாராட்டத்தக்கதே. நம் பூமிதான் அண்டத்தின் மையம் என்று இயங்கிய ஐரோப்பாவில் சூரியன்தான் மையம் என்று சொன்ன பாதிரியார் உயிருடன் கொளுத்தப்பட்ட மதவாதக்கதைகள் உண்டு. ஓரிரு நூற்றாண்டுகளுக்குள் அவர்கள் அறிவியிலில் முன்னேறியது வேறொரு கதை.
விஞ்ஞான ரீதியாக, அண்டம் (Universe) மிகப்பரந்தது. எண்ணிலடங்காத நட்சத்திரங்களும் (stars) அந்த நட்சத்திரங்களை மையமாக வைத்து இயங்கும் கோள்களும் (planets) அண்டத்தில் அடக்கம். நம் கோளான பூமியின் மையமான சூரியனும் ஒரு நட்சத்திரம்தான். அண்டத்தில் எங்காவது/பல கோள்களில் உயிரினங்கள் வாழும் வசதி இருக்கும் என்பதே விஞ்ஞானிகளின் நம்பிக்கை. அப்படிப் பட்ட ஆராய்ச்சியில் விளைந்த ஒரு கண்டுபிடிப்புதான் சமீபத்தில் Trappist என்ற தொலைநோக்கியும், Spitzer என்ற தொலைநோக்கியும் கண்டுபிடித்த பூமி போன்ற மூன்று கோள்கள்.

இந்தியர்கள் அதிகம் ஆஸ்கார் வாங்கியிருக்காத நிலையில், ஒரே படத்திற்காக ரஹ்மான் இரண்டு ஆஸ்கார் வாங்கியது மாதிரி மொத்தம் ஏழு கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இந்நிகழ்வின் சிறப்பு.

(Part 1/4) (இந்தப் பதிவு இன்னும் தொடரும்)

பவுசியாவின் பரிந்துரையின் பேரில் துண்டு துண்டுகளாக வழங்குகிறேன். இது முதல் பகுதி.

#நியூட்டன்_விஞ்ஞானப்பதிவுகள்  (2)

0 comments:

Post a Comment