Aadhitha Karikalan Kolai

3 comments

சில நாட்கள் வரலாறு பற்றிய பதிவுகளை எழுதுவதை தவிர்த்து வந்தேன். இன்று மறுபடியும் தொடங்குகின்றேன். பொதுவாக வரலாறு தொடர்பான தகவல்களை அறுதியிட்டு கூற இயலாது. இது தான் நடந்திருக்கும் என கல்வெட்டு,இலக்கியங்களில் எழுதப்பட்ட ஒன்று தான் இன்று நாம் படித்துக் கொண்டிருக்கும் வரலாறு. அதில் ஒன்றை மட்டும் நான் அறிந்த மட்டில் எழுதுகிறேன்

நாம் இதுவரை படித்து வந்த வரலாறு மிகக் குறைவானதே. நாம் நினைத்துப் பார்க்க இயலாத பல விஷயங்களை படிக்க மறந்து விட்டோம். நாம் கற்க மறந்திட்ட வரலாறு பல வரலாறு பல மர்மங்களை உள்ளடக்கியதாக இருக்கின்றது. இன்று வரைக் கூட அதற்கான முடிவு தெரியாமல் ஒரு முடிவில்லா கண்ணாடி பிம்பம் போல குழப்பிக் கொண்டே இருக்கின்றன. சோழ இளவரசன் பரகேசரி ஆதித்த கரிகாலன் என அழைக்கப்படும் இரண்டாம் ஆதித்தன் மரணமும் இவ்வகையைச் சார்ந்ததே

வரலாறு நன்கு அறிந்தவர்களுக்கு இதைப் பற்றிய விளக்கம் அதிகம் தேவையில்லை. தெரியாதவர்களுக்கு விளக்கினாலும் விளங்கப்போவதில்லை.

தமிழர்கள் தஞ்சாவூர் பெரிய கோவிலை எடுப்பித்த இராஜராஜ சோழனை அறிந்திருக்கலாம் (?).அந்த கால கட்டத்தில் நிகழ்ந்த அரியணை சிக்கல்களையும் அரசியல் கொலைகளையும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

கி.பி. 966 தென் புதுக்கோட்டை மாவட்டம் சேவூர் என்னும் களத்தில் இரண்டாம் முறையாக சோழ – பாண்டிய படைகள் மோதுகின்றன. முதல் போரில் பங்கேற்ற இராஜகேசரி இரண்டாம் பராந்தக சுந்தர சோழன் இம்முறை போரில் பங்கேற்க வில்லை. சோழப் படைகளுக்கு பட்டத்து இளவரசன் ஆதித்தன் (II) தலைமை ஏற்கிறான்.பாண்டிய படைகள் வீர பாண்டியன் தலைமையில் இயங்குகின்றன. இலங்கை படையும் பாண்டியனுக்குத் துணையாக வருகிறது

போரில் சோழர்கள் வெற்றி பெறுகின்றனர்.பாண்டியனை விட்டு வைத்தால் மீண்டும் போர் தொடர்ந்து கொண்டே இருக்கும். அதற்கொரு முடிவு கட்ட போரின் போது வீர பாண்டியன் தலையைக் கொய்து ஈட்டியில் ஏந்தி தஞ்சாவூர் வாயிலில் நட்டு வைக்கிறான்.

பாண்டிய மன்னனை போரில் காக்க இயலா ஆபத்துதவிகள் கரிகாலனைக் கொல்ல உறுதி பூண்டனர். வெற்றியும் கண்டனர். இது அவனது மரணத்திற்கு கூறப்படும் ஓரு காரணம்

ஒரு அரச வம்சத்தில் மூத்த மகன் மற்றும் அவனது சந்ததியினரே அரச பதவியை அலங்கரித்து வந்தனர். அதற்கு மாறாக சுந்தர சோழன்,கண்டராதித்த சோழனின் புதல்வன் மதுராந்தக உத்தம சோழன் பெற வேண்டிய பதவியை அலங்கரித்தும் கரிகாலனை இளவரசனாகவும் அறிவித்திருந்தான். சுந்தர சோழனுக்குப் பின் அரச பதவியை விரும்பிய உத்தம சோழன் தடையாக இருப்பதாக கருதி கரிகாலனை கொன்றிருக்கலாம்.

கரிகாலனின் கல்வெட்டுகள் தொண்டை மண்டலம் முழுவதும் காணப்படுவதால் கரிகாலன் இணை அரசனாக தந்தையுடன் இருந்து ஆட்சி நடத்தியிருக்கலாம். கி.பி. 969 ல் தற்போதைய காட்டு மன்னார்கோவிலில் கரிகாலன் மரணம் நிகழ்ந்தது. உடையார்குடி கல்வெட்டும் திருவாலங்காட்டுச் செப்பேடுகளும் இதையே உறுதிப்படுத்துகின்றன
” விண்ணுலகுக்குச் செல்ல வேண்டும் என்ற ஆசையால் ஆதித்தன் மறைந்தான்(காணாமற் போனான்) கலியின் வல்லமையால் ஏற்பட்ட காரிருளைப் போக்க, அருள்மொழிவர்மனை அரசனாகுமாறு அவனுடைய குடிமக்கள் வேண்டினர். ஆனால் க்ஷத்ர தருமத்தை நன்கு அறிந்த அருண்மொழி அரசபதவியை விரும்பவில்லை என்று கூறிவிட்டான். தன்னுடைய சிற்றப்பன் அவ்வரச பதவியை விரும்புவதை உணர்ந்தமையால் தன் சிற்றப்பன் ஆசை தீருமட்டும் அரசனாக இருக்கட்டும் என்று அருண்மொழி அரசபதவியை மறுத்துவிட்டான்”
-திருவாலங்காட்டு செப்பேடுகள்

வீர பாண்டியன் தலை கொண்ட கரிகாலனை கொன்ற குற்றத்திற்காக இரவிதாசன்.கிராமவிதத்தான்,சோமன் சாம்பவான், மற்றும் அவர்களின் உறவினர்களின் சொத்துகளை பறிமுதல் செய்து அவர்களை நாடு கடத்தியதாக இராஜராஜனின் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.

பொதுவாக ஒரு பட்டத்து இளவரசனை, இணை அரசனை, எளிதில் அணுக இயலாது. வேளக்கார படையையும் மீறி மரணம் நிகழ்ந்துள்ளது என்றால் மரணம் சோழப் பேரரசில் செல்வாக்கு உடையவர்களாலே நிகழ்ந்திருக்கலாம்.விஜயாலய சோழன் காலத்திலிருந்தே புகழ் பெற்றிருந்த பழுவூர் சிற்றரசர்கள் இராஜராஜனின் ஆட்சிக்குப் பிறகு வரலாற்றிலிருந்து மறைந்து போயினர். இது கரகாலன் மரணத்தோடு தொடர்புடையதாயிருக்கலாம்

எது என்னவாக இருந்தாலும் மரணம் சம்பவித்து ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் கரிகாலன் குரல் மட்டும் ஒலித்துக் கொண்டே இருக்கின்றது.

தமிழன் என்பதில் பெருமை கொள்வோம்

3 comments: