பூச்சிக்கு மருந்து அடிப்பது யார்...?

Leave a Comment

இருப்பவர்கள்
இருந்திருந்தால்
இப்படியும்
நடக்குமா.?
இப்படியே
கடந்து போனால்
இனியென்ன
நடக்குமோ..?

போகவிட்டுப்
பின்னாலே – சும்மா
பெயர் சொல்லிக்
கிண்டல்பண்ணப்
பெடியள்
பயந்திருந்த
காலமது….

இன்று
கோவிலுக்கு
பூவெடுத்துக்
கும்பிடத்தான்
போனாலும்
பூசாரி மணி
அடித்தும்
மந்திரங்கள்
உச்சரித்தும்
எண்ணமெல்லாம்
பிள்ளைகள்
போன இடம்
பத்திரமோ
என்றுதானே..?
புலன் ஐந்தும்
பறக்கிறது.

கல்வியே செல்வமென்று
கல்விக் கூடம்
சென்றாலும்
கற்போடு பிள்ளையின்று
போதையின்றிச்
சேதமின்றி
வீடு திரும்பி
வருமென்று
இன்னுமென்ன
உத்தரவாதம்…?

காவலுக்கு
உத்தியோகம்
பார்க்கவரும்
காவலர்கள்
கழட்டி வைத்த
தொப்பிக்கு கூட
இந் நாளில்
ஒரு மரியாதை
இல்லையே….?

அவர்கள்
கண்டபடி
சட்டத்தை
இருட்டிலேயே
விழுங்கிவிட்டு
வெளிச்சத்தில்
ஊருகின்ற
விசப் பாம்பைக்
கூடஅடிக்கத்
திராணியற்று
வீணாகச்
சம்பளத்தை
கிம்பளமாய்
வாங்குகின்றார்…

காலம் தாழ்த்தி
சினிமாக்
கொட்டகையில்
இடம்பிடிக்க
வழிகாட்டும்
சின்ன ஒளியில்
இடம் மாறி
உட்கார்ந்ததுபோல்
இருட்டின் மீது
நடக்கின்றோம்..

எந்தக் கதிரையிலும்
மூட்டை
கடிக்குமென்று
தெரிந்தே
உட்கார்ந்தால்
தப்பைத் தனியாக
யார் கணக்கில்
எழுதுவது…..

பூச்சிக்கு மருந்து
யார் அடிப்பது…?

அருள் நிலா வாசன்

0 comments:

Post a Comment