நியூட்டன்_விஞ்ஞானப்பதிவுகள் (6) - twittor newton

Leave a Comment

Ig Nobel Prize – Part 1/2
.
#நியூட்டன்_விஞ்ஞானப்பதிவுகள் (6)
.
நோபல் (Nobel) பரிசு பற்றிப் பலருக்கும் தெரியும். இலக்கியம், பொருளாதாரம், அமைதி, மருத்துவம் மற்றும் அறிவியலின் சில துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு வருடாவருடம் வழங்கப்படும் ஒரு பரிசு. சமீபத்தில் கூவத்தூர் கோஷ்டிகள் கூட நோபல் பரிசு பற்றிப் பேசி கூத்தடித்த விஷயம் அரசியல் என்பதால், அதை இந்த அறிவியல் பதிவில் இருந்து ஒதுக்கிவிட்டு சுத்த பத்தமாக மீதியைத் தொடர்வோம்.
.
இந்தியக்குடிமகனாக இருந்து, விஞ்ஞானத்திற்காக நோபல் பரிசைப் பெற்ற ஒரே விஞ்ஞானி சர்.சி.வி.ராமன் என்பது உபரித் தகவல். ***(விஞ்ஞானத்திற்கான நோபல் பரிசு பெற்ற மற்ற சில இந்தியர்கள் அமெரிக்க/பிரிட்டிஷ் குடியுரிமை பெற்றவர்கள் என்பது உபரி உபரித்தகவல்)***. 
.
தலைப்பிலேயே எழுதியாச்சு. ப்ரோமோஷன் வேறு பண்ணியாச்சு என்பதால், இந்தப்பதிவு நோபல் பரிசு பற்றியல்ல, இக்நோபல் (Ignobel) பரிசு பற்றியது என்று மட்டும் சொல்லிவிட்டுப் பதிவுக்குள் நுழைகிறேன்.
.
விஞ்ஞானத்தைப் பொறுத்தவரை, நோபல் பரிசு என்பது பெரும்பாலும் மனித குலத்துக்குப் பயன் வாய்ந்த ஒரு கண்டுபிடிப்புக்காகவே வழங்கப்படும். சர்.சி.வி. ராமன் பரிசு வாங்கியது “ராமன் விளைவு” (Raman Effect) என்று இப்போது அழைக்கப்படும் கண்டுபிடிப்புக்காக. அவர் கண்டுபிடிப்பு Raman Spectroscopy என்ற பெயரில் (பொருட்களின் குணாதிசயங்களைப் பற்றி ஆராய்வதில்) இன்றும் விஞ்ஞானிகளுக்கு உதவியாக இருக்கிறது. என் முதல் கட்டுரையில் குவான்டம் மெக்கானிக்ஸ் பற்றியும், “இப்படில்லாமாடா சிந்திப்பீங்க” என்று அந்தக்கால விஞ்ஞானிகளைப் பற்றி நாம் வியக்க முடியும் என்றும் எழுதியிருந்தேன்.  இப்போது நாம் பார்க்கப்போகும் இக்நோபல் பரிசும் “இப்படில்லாமாடா சிந்திப்பீங்க?” வகையைச் சார்ந்ததுதான். ஆனால், சொல்லும்போது மாடுலேஷன் மட்டும் வடிவேல் பாணியில் இருப்பது அவசியம்.
.
இக்நோபல் பரிசு பற்றி மேலதிகத் தகவல்கள் வேண்டுபவர்கள் இந்த முகவரிக்குச் செல்லலாம் (http://www.improbable.com/ig/) வருடக்கணக்கில், எந்தத் துறையில் யாருக்கு, எதற்காகக் கிடைத்தது என்ற தகவல்கள் கிடைக்கும். உதாரணத்திற்காகச் சில:
1. எம்மாம்பெரிய யானையோ, தம்மாத்தூண்டுப் பூனையோ எந்தப் பாலூட்டியும் ஒண்ணுக்குப் போக எடுத்துக்கொள்ளும் நேரம் 21 நொடிகள் (ப்ளஸ் ஆர் மைனஸ் 13 நொடிகள்) என்ற கண்டுபிடிப்பு. யானைக்குப் பெரிய சிறுநீர்ப்பை இருக்கும். அதனால், அது ரொம்ப நேரம் எடுக்கும் என்று நீங்கள் நினைத்திருந்தால் அது தவறு. அதோட “பைப்”பும் பெரிசு என்பது இப்பரிசு பெற்ற ஓர் ஆராய்ச்சி
2. நான்கு நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த மொரோக்கோ மன்னர்,நிஜமாகவே 888 குழந்தைகளுக்குத் தகப்பனா? அப்படியானால், எப்படி அது சாத்தியம் என்ற கணித ஆராய்ச்சி
3. லஞ்சம் வாங்காத போலிஸ்காரர், இன்னும் கொஞ்சம் நோட்டுக்களைக் கையில் வைத்து அழுத்தியதும் ஏன் வாங்குகின்றார் என்ற பொருளாதார ஆராய்ச்சி
4. முத்தத்தால் நம் உடலில் விளையும் ஆரோக்கியமான மாற்றங்கள் பற்றிய ஆராய்ச்சி (கிஸ் ஆப் லவ் ஏன் போராட்டமல்ல, அது ஒரு சுயநலமிக்க செயல் என்பது வேறொரு விவாதத்தளம்).
5. பாறைகளின் ஆளுமை, அட ஆமா, ஒவ்வொரு பாறைக்கும் ஒரு குணாதிசயம் இருக்காம் (Rock's personalities பற்றிய ஆராய்ச்சி)

என்று அடுக்கிக்கொண்டே செல்லலாம். விருப்பமுள்ளவர்கள் நான் சொன்ன இணையத்தளத்திற்குச் சென்று வாசித்துக்கொள்ளுங்கள். இந்தப்பதிவு ஒரு தூண்டுகோல் மட்டுமே.
.
இந்த விருது வழங்கும் விழாவும் ரொம்பக் களை கட்டுமாம். நோபல் பரிசு வழங்கும் விழா கொஞ்சம் சீரியசான, formalஆன விழா என்றால் இது வேறு மாதிரியாம். பேசுகிறவர் நீண்ட நேரம் பேசி ரொம்பப் போரடித்தால், “எனக்குப் போரடிக்குது, நிறுத்துறீங்களா?” என்று கத்துவதற்காவே ஒரு பெண் நியமிக்கப்பட்டிருப்பாராம். பரிசு வாங்க வருபவர்கள் மேல் காகித ராக்கெட் எரியும் வழக்கம் இந்த விருது வழங்கும் விழாவின் ஒரு சிறப்பம்சமாம். சரி, அப்ப நோபல் பரிசு சிறப்புப் போலிஸ்ன்னா, இது சிரிப்புப் போலிசான்னு நீங்கள் கேட்கலாம். அப்படியும் சொல்லி ஒதுக்கிவிட முடியாது. நோபல் விஞ்ஞானிகளே இந்தப் பரிசளிப்பு விழாவுக்கு வந்துப் பரிசளிப்பது வழக்கமாம். மேலும், இந்த விருது வழங்கும் அமைப்பின் கூற்றுப்படி, “முதலில் சிரிக்க வைத்துப் பின்னர் யோசிக்க வைக்கும்” ஆராய்ச்சிகளுக்கே இந்த விருது வழங்கப்படுகிறது.
.
மேல் பத்தியில் கூறியது போக, இந்த ஆராய்ச்சிகளின் மூலம் பல பயன்கள் விளைந்ததுமுண்டு. உதாரணத்துக்காக, கொசுக்கள் பற்றிய ஆராய்ச்சி ஒன்றைச் சொல்லலாம். கொசுக்கள் நம் கால்கள் (அதிலுள்ள வியர்வைச் சுரப்பிகள்) வெளிப்படுத்தும் வாசனையை முகர்ந்தே நம்மைக் கடிக்க வருகின்றன. ஒரு இக்நோபல் ஆராய்ச்சி வெளியிட்ட அறிக்கையின் படி Limburger cheese எனப்படும் ஒருவிதப் பாலாடைக்கட்டிகளும் நம் கால்கள் போலவே மலேரியா உண்டாக்கும் கொசுக்களைக் கவரும் தன்மை உள்ளவையாம். இதனால் என்ன பயன்? மலேரியா பரவலாக உள்ள ஆப்பிரிக்கநாடுகளில் இந்தப் பாலாடைக்கட்டியைக் கொசுவுக்கு லஞ்சமாகக் கொடுத்து மலேரியாவைக் குறைத்துள்ளார்களாம். ரசாயனக் கெடுதல் சக்தியுள்ள ஆல்(ஆள்)அவுட் போன்ற கொசு விரட்டி சாதனங்களைக் காட்டிலும் இது கெடுதல் இல்லாத ஒரு வழிதானே?
.
தாங்கள் செய்யும் வேலையை, அளவுக்கதிகமான ஈடுபாட்டோடு (passion) செய்து அதையே ஓர் ஆராய்ச்சிப்புலமாக, பாடமாக ஆக்கும் அளவுக்கு முனைப்பானவர்கள் வளர்ச்சி அடைந்த வெளிநாட்டவர்கள். இதற்கு வளர்ப்பிலேயே உருவான ஒரு தன்னம்பிக்கையும், வாழ்க்கைச்சூழ்நிலையும் காரணம். நாம்தான் பிறநாட்டினர் செய்வதையே செய்து தலைமைத்துவம் (leadership) இல்லாமல் தொண்டர்களாகவே (followers) ஆக இருக்கிறோம். எனக்கும் முகநூல், டிவிட்டர் வாழ் மக்கள், அவர்தம் புரட்சிகள் பற்றி ஆராய்ச்சி செய்து இக்னோபல் பரிசு வாங்க ஆசை. செய்வீர்களா? செய்வீர்களா?
.
.
(இக்னோபல் வரிசையில் part 2, தவளை தூக்கி, அடுத்த வாரம் வெளிவரும்)
.
(முடிந்தவரை பலபேரை tag செய்துள்ளேன். விடுபட்டவர்கள் தாங்களே tag செய்துகொள்ளுங்கள். மன்னிக்கவும்)

0 comments:

Post a Comment