கன்னங்கரேலென முகம். அது வாகனப் புகைகளினாலும், குளிக்காத தேகத்தினாலும் இருக்கலாம். கண்களையும், கன்னங்களின் சிறு பகுதிகளையும் மட்டும் விட்டுவைத்துவிட்டு மற்ற சுற்றுப்புறமெங்கும் ஏகோபித்து வளர்ந்திருந்தது முகத்தில் முடி. கரியேறிய சட்டை மற்றும் பேண்ட். பேண்ட்டில் மட்டும் ஆங்காங்கே பொத்தல்கள். கருமம் அந்தப் பொத்தல்களில் ஒன்று அவன் பிருஷ்டம் விளக்கும் இலைமறைக் காயாக. பக்கம் சென்றால் குடலைப் புடுங்கும் நாற்றமெல்லாம் இல்லை. சுகீக்கும் வாசமும் இல்லை. நினைத்தால் குளிப்பான். எங்கேயாவது கண்தெரியும் உப்புத்தண்ணிக் குழாயினில். எங்கள் வீட்டின் அருகே மாநகராட்சிக் குப்பைத்தொட்டி ஒன்று. சற்றே அகலமான குப்பைத்தொட்டிதான். வழி செல்லும் பேருந்திற்கு இடையூறாக இருக்கிறதென்று என் அப்பா பலமுறை கார்ப்பரேஷனுக்கு சொல்லி எழுதிப்போட்டும் நகராமல் மஞ்சள் நிறத்தில் ஜம்மென நின்று கொண்டிருக்கும் அது. அதில் கறுப்பு நிற பொட்டை நாயுடன் தன்னுடைய இருப்பைப் பகிர்ந்துகொள்வது 'காக்கா' வின் வழக்கம். இந்தப் பாராவை சுருங்கச் சொன்னால் அவன் ஒரு பரதேசி.
காக்காவை நீங்கள் கோவை தெலுங்கு வீதிகளில் கட்டாயம் பார்த்திருக்கலாம். அவன் இயற்பெயர் எவருக்கும் இங்கே தெரிந்திருக்க வாய்ப்பில்லை. 'காக்கா' என்றால் எல்லோருக்கும் தெரியும். "ஏன்ப்பா காலங்காத்தால அவன் பேச்ச எடுக்குற? கரு நாக்குப்பய வந்துட கிந்திடப் போறான். வந்து எதுனா சொல்லித் தொலைச்சான்னா நாசமா போயிரும் பைத்தியக்காரப் பய!", என்பார் டீக்கடை நாகராஜன். பசி எடுத்தால் பிச்சைதானே பரதேசிகள் கேட்பார்கள். அவர்களில் காக்கா தனிரகம். வந்து 'ஒரு ரூவா குடு', என்பான். இல்லை என்று சொல்லாத அளவிலான சில்லறையே அவன் நியாயமான கோரிக்கை ஒவ்வொருவரிடமும். ஒரு ரூபாய்க்கு கொஞ்சமும் கூடிக்குறைய வாங்க மாட்டான். இல்லை என்று சொன்னாலோ, காசு அதிகமாகக் கொடுத்தாலோ, நக்கல் பார்வை பார்த்தாலோ, "ங்கோத்தா, ங்கொம்மா, தாயோளி" என வரிசையாக வசவு வார்த்தைகளால் நாராபிஷேகம் செய்துவிடுவான். பலரும் அந்த வார்த்தைகளுக்குப் பயந்தே அவன் வந்துக் கேட்டதும் அந்த ஒரு ரூபாயைக் கொடுத்துவிடுவார்கள். கூடக் காசு கொடுக்காமல் ஏதேனும் சாப்பிட வாங்கிக் கொடுத்தால் கூடுதலாக ஒரு சலாம் போட்டுவிட்டு நகர்வான். கொடுக்க மறுத்து அவன் திட்டி யாரேனும் அடித்தால் திருப்பி அடிப்பான். யாருக்காகவும் எந்த வேலையும் செய்ய மாட்டான். அவன் தோற்றம் அதையெல்லாம் கொடுக்க எத்தனிக்காது என்பதே உண்மை.
இப்படித்தான் ஒரு நாள், அய்யர் ஒருவர் குடும்ப சகிதமாக பார்க்கிற்கு வந்திருந்தார். வெளியே வந்தவரிடம் காக்கா 'ஒரு ரூவா குடு', என கேட்க அய்யர் மறந்தவாக்கில், "காசெல்லாம் இல்ல. போப்பா!", என்றார். அவ்வளவுதான். பொண்டாட்டி குழந்தைகள் மத்தியில் ங்கோத்தா ங்கொம்மா என்று சகட்டுக்கும் திட்டி ஏதோ தொடர்ந்து திட்டினான். அந்த இரண்டு வார்த்தைகளைத் தவிர மற்ற அனைத்தும் தமிழே இல்லை என்பது என் உத்தேசம். கூனிவிட்டார் அய்யர். அடிக்கவெல்லாம் தயிர்சாத உடம்பில் தெம்பும் இல்லை. திருப்பி ஒரு அடி அடித்தால் இவன் தரையோடு ஒட்டிவிடுவார் பாவம். காக்கா காசு கேட்பவர்களை தேர்ந்தெடுத்துக் கேட்பான். அய்யர் இல்லை என்றவுடன் பக்கத்தில் இருந்த யாரிடமும் கேட்கவில்லை. திட்டிக்கொண்டே கால்மைல் தூரம் நடந்து அங்கு யாரிடமாவது கேட்பான். தேர்ந்தெடுப்பதில் தகுதி தராதரம் எல்லாம் பார்க்க மாட்டான். குருட்டாம்போக்குதான்.
மறுநாள் குப்பைத்தொட்டி அருகே ஒரு போலீஸ்காரர் டூவீலரில் வந்தார். நாய் மட்டும்தான் இருந்தது. இறங்கி லத்தியுடன் டீக்கடை நாகராஜனிடம் "காக்கா ங்கறவன் யாரு இங்க", என்றார். காக்கா டீக்கடை பக்கத்தில் தான் கொஞ்சம் அசந்தாப்போல் தூங்கிக்கொண்டிருந்தான். லத்தியில் போட்டு வெளுவெளுவென்று வெளுக்க ஆரம்பித்து விட்டார். ஏன் அடிக்கிறீர்கள் இவனை என எவரும் கேட்கவில்லை, காக்காவுக்கும் திருப்பி அடிக்க முடியவில்லை. வலியில் துடிதுடித்தான். சுற்றி பெரிய கூட்டமே உருவாகிவிட்டது. என்னதான் காக்காவை யாருக்கும் பிடிக்கவில்லை என்றிருந்தாலும் பார்க்கப் பாவமாக இருந்தது. சரியாக அடித்து முடித்து அந்த போலீஸ் கிளம்புவதற்கும், நான் வேலைக்குச் செல்லும்வழியில் அந்த நிகழ்வைப் பார்த்து ஓடிவரவும் சரியாக இருந்தது. வேகமாக ஓடிவந்து காக்காவைத் தூக்கினேன். சுற்றி வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருந்தவர்களை ஒரு முறை முறைத்தேன். அவர்களுக்கு நானேதோ சமிக்ஞை கொடுத்ததைப்போல அந்த இடத்தைவிட்டு நகர்ந்தார்கள். சுற்றி இருந்தவர்களின் மீதான கடுப்புடன் காக்காவைத் தூக்கி உட்கார வைத்துவிட்டு, "இரு காக்கா, வந்துருறேன்", என நாகராஜ் அண்ணன் கடைக்கு ஓடினேன்.
"என்னன்னே கடை முன்னாடி போட்டு அடிக்கிறாங்க. பார்த்துட்டு தான் இருப்பீங்களா? காக்காவை உங்களுக்குத் தெரியாது? ஏன்னு தடுக்கலாம்லனே..", என்றேன். "கேட்டு எனக்கு ரெண்டு அடி சேர்த்து விழும். எனக்கும் பாவமா தான் இருக்கு. இந்த சப்-இன்ஸ் ஐ பத்தித்தான் தெரியும்ல ப்பா? சரி இந்தா தண்ணி குடு அவனுக்கு. பாவம் நாயடி அடிச்சுட்டான் பொறிக்கிப் பய!", என்றார் நாகராஜ் அண்ணன். தண்ணி கொடுத்து குடிக்க வைத்தேன் காக்காவிடம். கண்ணுல தண்ணி கொஞ்சங்கூட வைக்கவில்லை. ஷ்ஹ்ஹ் ஸ்ஷ்ஹ் என வலியில் பொருமினான். என்னை நிமிர்ந்துகூட பார்க்கவில்லை. "டீ வேணுமாணே?", என்றேன். ம்ஹூஹும். எந்த அசைவும் இல்லை. ஏற்கனவே கிழிந்த கந்தல்கள் மேலும் கிழிந்திருந்தது. பக்கத்தில் உட்கார்ந்தேன். "ஏன்னே இப்டி? எதுனா வேலை செய்யலாம்லனே? எத்தனை நாள் இப்டி ஓட்டுவ?", என்றேன். முறைத்தான். ஆனால் என்னைத் திட்டவில்லை. இரண்டுமுறை நிமிர்ந்துப் பார்த்து ஏதோ சொல்ல வருபவன் போல முறைத்தான். ஆனால் எதுவும் சொல்லவில்லை. ஒரு ஓலமிட்டான். அதன் அர்த்தம் எனக்கு விளங்கவில்லை. எனக்கு இரண்டு மூன்று அலைபேசி அழைப்புகள் வேறு இடையிடையே. அலுவலுக்கு நேரமாயிருந்தது. நேரே பக்கத்தில் இருந்த ஓட்டலில் ஐந்து இட்லிகள் வாங்கி அவனிடம் பிரித்துக் கொடுத்துவிட்டு நகர்ந்தேன். கட்டாயம் காக்கா சப்பிடுவான் என்று தெரிந்தே நகர்ந்தேன்.
அலுவலகம் வந்தபின்பும் காக்காவின் நினைப்பாகவே இருந்தது. கட்டாயம் இந்த போலீஸ் புகார் அந்த அய்யரின் வேலைதான். நன்றாகவே தெரிந்தது. இதை காக்காவும் அறிந்திராமல் இல்லை. காக்காவை மாற்ற எதுவும் வழி இருக்கிறதா என யோசித்துக்கொண்டு இருந்தேன். ஒன்றும் தோன்றவில்லை. காக்கா என்னை பெரிதாக ஈர்த்திருக்கவில்லை. சின்ன சின்ன ஸ்டைல்களில் வசீகரித்திருந்தான். குழந்தைகள் அவனிடத்தில் அத்தனை பிரியமாக வந்து விளையாடும். குழந்தைகள் நாற்றமெல்லாம் பார்க்கும் ஜாதியல்லவே. காக்காவுக்கும் குழந்தைகள் என்றால் அத்தனை பிரியம். அவன் சிரிப்பதே தப்பித்தவறி அவனிடம் வரும் குழந்தைகளைப் பார்த்து மட்டும்தான். குழந்தைகளை அவர்கள் அம்மாவோ, அப்பாவோ பார்த்தால் வெடுக்கென எடுத்துக்கொள்வார்கள். "புள்ள புடிக்குறவன் மா, அங்கெல்லாம் போகக்கூடாது", என பயமுறுத்துவார்கள். காக்காவுக்கு ஒரு மாதிரி இருக்கும். மூர்க்கமாக முறைத்துக் கத்துவான் அவர்களைப் பார்த்து. காக்காவின் முன்பிருந்த வரலாறு இங்கிருக்கும் யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. ஆனால் அவன் பைத்தியமில்லை. அது மட்டும் நிஜம்.
திருப்பி அலுவல் வேலைகள் முடித்து வீடு வந்தேன். வரும் வழியில் காக்காவைப் பார்த்தேன். சிரித்தான். எனக்கு ஏதோ என் காதலை காதலி ஏற்றுக்கொண்டதைப் போல ஒரு வெற்றிப் பூரிப்பு. பதிலுக்கு சிரித்துவிட்டு வீடு வந்தேன். காக்கவிடம் அந்த அடி வாங்கிய வடு சுத்தமாக முகத்தில் இல்லை என்பது அவன் சிரிப்பு சொன்னது. அன்றிரவு ரோந்துக்காக வந்த அந்த சப்-இன்ஸை கோணியில் முகத்தை மூடி வெளுத்துவிட்டு, கண்காணாமல் ஓடிவிட்டிருந்தான் காக்கா. அதைப் பார்த்த மாநகராட்சித் தொழிலாளியான ஒரு அக்கா நாகராஜனிடம் சொல்ல அவர் அதை என்னிடம் சொல்லி இருவரும் சிரித்துக்கொண்டு இருந்தோம் காக்காவைப் பார்த்து. அவனும் பதிலுக்கு சிரித்தான். அந்த வழியே அய்யர் டூவீலரில் டீக்கடையைத் தாண்ட முற்பட படக்கென்று காக்கா தடுத்து நிறுத்தினான். அய்யருக்கு உதறலெடுத்துவிட்டது. ஓடலாமா என யோசிக்க அதற்குக் கால்களும் உஷாராகவில்லை. மெதுவாக அய்யரின் முகத்தருகே தன் முகத்தைக் கொண்டுபோய் ஏதோ மோந்து பார்த்தவனாய் "ஒரு ரூபா குடு", என்றான் காக்கா. அய்யர் தடுமாறி கொண்டே வேட்டியில் முடிந்திருந்த ஒரு ரூபாயை எடுத்துக் கொடுத்தார். பல்லைக்காட்டாமல் உதடுகள் அரையடிக்குச் செல்ல காக்கா அந்த ஒரு ரூபாயை சிரிப்புடன் வாங்கிக்கொண்டு சலாம் போட்டுவிட்டு நகர்ந்தான். வியப்புடன் நானும் நாகராஜன் அண்ணனும் பார்த்துக்கொண்டு இருந்தோம். அய்யருக்கு என்னமோ போலாகிவிட்டது.
0 comments:
Post a Comment