அப்பாமரம்

Leave a Comment
சிறுகதை
அப்பாமரம்
.•.•.•.•.•.•.•.
"எப்படிப்பா ஆச்சு?"
"கோயில் கும்பாபிஷேகத்துக்காக கோயில்ல சாரங்கட்டினப்போ
அதுலேருந்து கீழவிழுந்து இப்படி ஆகிட்டுங்க.
நாளைக்கு காலையில பத்துமணிக்கு எடுக்குறோம்.
அங்க இருக்குறவங்ககிட்ட கொஞ்சம் சொல்லிடுங்க."
"காசுபணம்லாம் வச்சிருக்கியாப்பா?"
"ஏற்பாடுபண்ணிட்டோம்ங்க."
"சரிப்பா"
என்னுடைய நிலையை என்னவென்று சொல்வேன்..?
இப்படியாகுமென்று நான் நினைக்கவேயில்லை.
அப்பா...
எனக்கு ஓவென்று அழுதுகொண்டேயிருக்கவேண்டுமென்று தோன்றியது.
அதற்குக்கூட நேரமில்லாமல்
அப்பா இறந்துபோனசெய்தியை எல்லோருக்கும் சொல்லிக்கொண்டிருந்தேன்.
டெலிஃபோன் பூத்திலிருந்து வெளியேவந்தபோதே
சட்டைப்பைக்குள்ளிருந்த பணத்தாள்களை தடவிக்கொண்டே வந்தேன்.
"எவ்வளவுண்ணே..?"
"அட.. போங்க தம்பி.
ஊர்ல எல்லாருமே ஒறஞ்சிபோயிருக்குறோம்.
நல்லா இருந்த மனுசனுக்கு இப்படி ஆயிட்டேனு..
இதுக்கெல்லாம் காசு வேணாம் தம்பி.
நீங்க வீட்டுக்கு போயி ஆவுற காரியத்த பாருங்க.."
இதற்கு நன்றிசொல்வதா வேண்டாமாவென குழம்பியபடியே
வெளியே வந்தபோது காற்று சில்லிட்டிருந்தது.
மழைவரும்போல.
காலில் கட்டைவிரலின் வலியை அப்போதுதான் உணர்ந்தேன்.
நகம் பிய்ந்துபோய் ரத்தம் வழிந்து
மணலும் ரத்தமும் கலந்தகலவையில்
கட்டைவிரலின் நிறம் மாறிப்போயிருந்தது.
செருப்புகளை எங்கே விட்டேன்று நினைவிலில்லை.
"தம்பி..
உங்கப்பா மேலேருந்து விழுந்துட்டாங்கப்பா.
பேச்சு மூச்சில்லாம இருக்காருப்பா.
சீக்கிரம் வாப்பா.."
நானும் கோயில்வேலையில்தானிருந்தேன்.
செய்தியை கேட்டவுடன் விழுந்தடித்து ஓடினேன்.
அப்போதுதான் கால்நகம் பிய்ந்திருக்கவேண்டும்.
ஒரே கூட்டமாயிருந்தது.
அப்பா...
என்னையுமறியாமல் கதறிக்கொண்டே உள்ளே புகுந்தேன்.
அப்பா...
என் அப்பா..
ஒரு நொடியில் எல்லாமே புரிந்துவிட்டது.
இன்னும் ஒருவாரத்தில் கோயிலுக்கு கும்பாபிஷேகமென்பதால்
கோயில்வேலைகள் துரிதமாய் நடந்துகொண்டிருந்தன.
கும்பக்கலசத்தை சுற்றியிருந்த பகுதிக்கு
வண்ணமடிப்பதற்காக சாரம்போட்டுக்கொண்டிருந்தவர்
கால்தவறி இப்படியாகிவிட்டிருக்கிறது.
நானும் அப்பாவும் ஒன்றாகத்தான் வேலைக்கு வந்தோம்.
நான்தான் மேலே ஏறப்போனேன்.
"வேணாம்டா தம்பி..
அதுகொஞ்சம் மெனக்கெட்ட வேல.
நீ, யாகக்கூடத்துக்கு போய் காலு ஊனு..
நான் இதை பார்த்துக்குறேன்."
இதுதான் அப்பா என்னிடம் கடைசியாகப்பேசிய வார்த்தை.
மல்லாந்தவாறே வெறித்துக்கிடந்தார்.
பின்மண்டையிலிருந்து வழிந்த ரத்தம்
சாரம்போடுவதற்காக கிடத்திவைக்கப்பட்டிருந்த
கழிகளில் வழிந்துகொண்டிருந்தது.
அதுதான் எனக்கு நினைவிருந்தது.
மீண்டும் கண்விழித்தபோது கோயிலின்வாசலில் கிடத்தப்பட்டிருந்தேன்.
மயக்கம்போட்டுவிழுந்திருக்கிறேன்.
இங்கே கொண்டுவந்து போட்டிருக்கிறார்கள்.
அப்பா..
"தம்பி, அப்பா போய்ட்டாருடா" நாட்டாமைக்காரரின் பதிலில் மீண்டும் மயக்கம் வருவதுபோலிருந்தது.
"அதெல்லாம் அப்பாவுக்கு ஒன்னுமாகிருக்காது.
ஆஸ்பத்திரிக்கு அழைச்சிட்டு போகணும்.." என்றவாறே அந்த இடத்திற்கு ஓடினேன்.
அப்பாவை காணவில்லை.
"போஸ்ட்மாடம்க்கு கொண்டுபோயிருக்காங்கடா.."
"அப்பா இறந்தேபோய்விட்டாரா..?"
நிதர்சனத்தை உணர்ந்துகொள்ள நேரம்பிடித்தது.
"போஸ்ட்மாடம் ரிப்போர்ட் இருந்தாதான் தம்பி
கவர்மெண்ட்ல காசு வாங்கலாம்."
கணக்குப்பிள்ளை எனக்கு ஆறுதல்சொல்லிக்கொண்டிருந்தார்.
"நீங்க வீட்டுக்கு போங்க தம்பி.
வீட்ல உள்ளவங்களுக்கு நீங்கதான் ஆறுதல்சொல்லணும்.
நடக்கக்கூடாதது நடந்திடுச்சி.
டேய் முருகேசா,
தம்பிவீட்டுக்குப்போயி ஆகவேண்டியத பாருங்கடா.."
நாட்டாமையின் பேச்சு
அடுத்தகட்ட நடவடிக்கையை துரிதப்படுத்தியிருந்தது.
வீட்டிற்கு விஷயம்தெரிந்துவிட்டதை
அம்மாவின் கதறலும் அக்காள் தங்கைகளின் பேரழுகையும் தூரத்திலிருந்தே வெளிப்படுத்தின.
"ரெண்டுபேரும் ஒன்னாதானடா வேலைக்கி போனிங்க..
இப்ப நீ மட்டும் வர்றியேடா.."
அம்மாவின் ஒப்பாரியில் எல்லாரையும் கட்டிப்பிடித்து அழுதேன்.
"மாரியாத்தாவுக்கு என்ன குறையோ..?
கோயில்லயே காவுவாங்கிட்டாளே.."
"நா இருக்கேன்மா..
அழாதேம்மா.." என்று அழுதுகொண்டேசொன்னபோதுதான்
அக்காள் மயக்கமடித்து விழுந்ததை கவனித்தோம்.
அக்காவிற்கு பல்கட்டிக்கொண்டது.
ஒருவழியாக வீட்டைவிட்டு வெளியே வந்து,
தூரத்திலிருந்த சொந்தக்காரர்களுக்கு சொல்வதற்காக
அவர்களின் ஃபோன் நம்பருடன் ஊரிலே இருந்த ஒரேயொரு டெலிஃபோன் பூத்திற்கு சென்றுவிட்டு
திரும்பும்வழியில்தான்
காலில் நகம்பிய்ந்திருந்ததை உணர்ந்தேன்.
கட்டப்பிள்ளை..
இதுதான் அப்பாவின் பெயர்.
ஊரிலுள்ள எல்லா கூரைவிடுகளிலும் அப்பாவின் கைரேகை ஓடிக்கொண்டிருக்கும்.
வேலையில் அவருடைய நேர்த்திதான்
அவருக்கு நல்லபெயரை பெற்றுத்தந்திருந்து.
அதனால்தான் கொட்டகைபோடுவது சாரம்போடுவது என்று எல்லாவேலைகளும் அப்பாவிற்கே வரும்.
அந்த வகையில்தான் கோயில்கும்பாபிஷேகத்திற்கான ஒட்டுமொத்த சாரவேலையையும்
அப்பாவிடம் கொடுத்திருந்தார்கள்.
நினைக்கநினைக்க அழுகையாய் வந்தது.
மூன்று பெண்குழந்தைகளுக்காகவும்
எனக்காகவும் அம்மாவுக்காகவும் அவர் பட்டபாடுகள் கொஞ்சநஞ்சமல்ல.
அப்போதுதான் சட்டென்று நினைவிற்கு வந்தது.
அந்த மரம்..!
எங்களை எப்படி வளர்த்தாரோ
அப்படியேதான் அந்த மரத்தையும் வளர்த்தார்.
அந்த மரத்திலிருந்த பெருங்கிளையை வெட்டித்தான்
இன்றைக்கு சாரம்போடுவதற்கு எடுத்துவந்தோம்.
அந்த மரத்தில் யாரையுமே ஏறவிட்டதில்லை அவர்.
"என்னப்பா இதுலதான் கழிவெட்டணுமா..?"
"ஆமாடா..
நம்ம மாரியாத்தாளுக்கு இந்த மரத்துலேருந்து
எதாச்சும் செய்யணும்டா.."
எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.
அப்பாவிற்கும் இந்த மரத்திற்குமான உறவுபற்றி எனக்கு நன்றாகவே தெரியும்.
கிட்டத்தட்ட இருபதாண்டுகளாக இந்த மரத்தை வளர்த்துவந்தார்.
வயக்காட்டில் முளைத்திருந்த வித்தியாசமான செடியை
பிடுங்கிவந்து வீட்டில் நட்டுவைத்ததாக எங்களிடம் சொல்லுவார்.
அது,
கன்றாக இருந்தநேரங்களில் அதற்கு தண்ணீர்விட்டுவிட்டுத்தான்
வேலைக்குப்போவார்.
மரத்திற்கு பெயரே இல்லை.
ஆமாம்.
அது இங்கேயுள்ள மரமேயல்ல.
கரும்பச்சைநிறத்து இலைகளும்
ஊதாப்பூ நிறத்திலான பூக்களுடனும்
நீளமான கிளைகளுடனும் மிகஉயரமாய் வளர்ந்துகொண்டிருந்ததுஅந்த மரம்.
நிச்சயமாய் அது வெளிநாட்டுமரமாகவே இருக்கவேண்டும்.
வெளிநாட்டுப்பறவைகளின் வருகையால் அந்தமரமும்
அப்பறவையின் எச்சத்தில் ஒளிந்திருந்திருக்கவேண்டும்.
இல்லையெனில் அந்த மரத்திற்கு இங்கே வேலையில்லை.
அப்பாவிற்கு அந்தமரம் ரொம்பவே பிடித்துவிட்டது.
அந்தமரத்திற்கும் அப்படித்தானென நினைக்கிறேன்.
அப்பா ஊரிலில்லாத சமயங்களில் அது சோகமாய் இருப்பதுபோலத்தோன்றும்.
அவரும் வீட்டிற்கு வந்தவுடன்
எங்களை கொஞ்சிவிட்டு மரத்தையையும் தடவிக்கொடுப்பார்.
இப்படிப்பட்ட மரத்திலிருந்துதான்
இன்று அவரே மேலேறி நல்ல கழியாக வெட்டினார்.
மாரியாத்தாளின் மீதான பக்தி,
தான் ஆசையாக வளர்த்த மரத்தின் கிளையையே வெட்டச்சொல்லியது.
டெலிஃபோன் பூத்திலிருந்து
எல்லாவற்றையும்
அழுதவாறே அசைபோட்டுக்கொண்டுவந்ததில்
வீடுவந்துவிட்டது.
அதற்குள் பந்தல்போட்டிருந்தார்கள்.
வீட்டுக்குள்ளே பெண்களின் ஒப்பாரிச்சத்தம்
என் கண்களை ஈரமாக்கிக்கொண்டிருந்தது.
"காலையில எட்டுமணிக்கெல்லாம் போஸ்ட்மாடம் முடிச்சிட்டு பாடிய வீட்டுக்கு அனுப்பிடுவாங்களாம்.
வந்ததும் எடுத்துடலாம்"
நாட்டாமைக்காரர்களின் பேச்சை கேட்டபடியே அமர்ந்திருந்தேன்.
"பாடி காலைலதான் வருமாம்.."
எனக்கு மாரியம்மன்மீது கோபமாக வந்தது.
இனிமேல் சாமியுமில்ல ஒன்னுமில்ல.
போஸ்ட்மார்டம்னா மண்டையை உடைப்பார்களே..!
நினைக்கையிலேயே நெஞ்சு வெடிப்பதுபோலிருந்தது.
மழைத்தூறல் விழத்தொடங்கியது.
ஃபோன்பேசிவிட்டுவரும்போதே மழைவருவதுபோலிருந்ததை
நினைத்துக்கொண்டேன்.
அப்போதுதான் அந்தமரத்தை கவனித்தேன்.
அந்த முன்னிரவுவேளையின் இருட்சூழ்ந்த சூழலில்
அந்த மரத்தை பார்க்கவே பாவமாயிருந்தது.
அதை உற்று கவனிக்கையில்தான்
இன்னொன்றையும் கவனித்தேன்.
மரம், கொஞ்சங்கூட அசையாமல் மரம்மாதிரியே நின்றது.
காற்று வலுவாக வீசியதை
பந்தலின் கீற்றுகள் உறக்கச்சொல்லின.
ஆனால் இந்த மரம்மட்டும் கொஞ்சங்கூட அசையாமல் அப்படியே நின்றது.
"என்ன தம்பி..
அப்பா வளர்த்த மரத்தை பார்த்துகிட்டே நிக்குறே..?"
பக்கத்துவீட்டுப்பெரியவர்
கொல்லையிலிருந்தவாறே கேட்டார்.
"ஒன்னுமில்லைங்க."
"கவலப்படாத தம்பி..
எல்லாத்தையும் அந்த மகமாயி பார்த்துப்பா.."
எனக்கு அந்த துக்கத்திலும் எரிச்சலாக வந்தது.
"அந்த மகமாயியாலதாங்க
எங்கப்பா போய்சேர்ந்துட்டாங்க."
அவர் வேறெதும் பேசவில்லை.
மழை தூறத்தொடங்கியிருந்தது.
இருந்தபோதிலும் வீடும் வாசலும் கூட்டமாகவே இருந்தது.
சொந்தக்காரப்பெண்கள் அரற்றிக்கொண்டே வருவதும்
வீட்டிற்குள் செல்கையில் ஒப்பாரியுடன் செல்வதும்
கொஞ்சநேரங்கழித்து ஒப்பாரி அடங்குவதுமாக இருந்தது.
நாட்டாமைக்காரர்தான் எல்லா செலவுகளையும் பார்த்துக்கொண்டிருந்தார்.
"இப்ப கையில காசு இல்ல.
நீங்க செலவுக்கு காசுகுடுங்க.
அப்புறமா கழிச்சிக்கலாம்" என்று அவரிடம் சொல்லிவிட்டதால்
எல்லா செலவுகளையும் அவரேபார்த்துக்கொண்டார்.
"எரிக்குறதா புதைக்குறதாப்பா?"
"எரிக்குறதுதாங்க எங்க வழக்கம்."
"சரி..
காலையில அம்மாளுவீட்டுல ராட்டிக்கு சொல்லிடுங்க.
மூங்கிக்கும் சொல்லிடுங்க.."
எனக்கு அப்போதுதான் தோன்றியது.
"மூங்கி வேணாங்க.
அப்பா இந்த மரத்ததான் ஆசையாசையா வளத்தாங்க.
இந்த மரத்தையே பாடைக்கு வெட்டிப்போம்ங்க."
"சரிப்பா..
நீ சொல்றதும் சரிதான்."
மரத்தை பார்த்தேன்.
அப்படியே நின்றிருந்தது.
சுற்றியிருந்த மரங்களெல்லாம் காற்றில் அசைந்துகொண்டிருக்க
இந்தமரம் அப்படியே நின்றதை என்னால் நம்பவே முடியவில்லை.
காலை எட்டேகால் மணிக்கெல்லாம் ஆம்பூலன்ஸ் வந்தது.
கதறல்களும் ஒப்பாரியும் மனதை வெடிக்கவைத்தன.
அப்பாவின் முகத்தை பார்த்தேன்.
கறுத்துப்போயிருந்தார்.
"போஸ்ட்மாடம் பண்ணின உடம்புப்பா..
ரொம்பநேரம் தாங்காது.
சீக்கிரமா காரியத்த பாருங்க."
யாரோ சொல்லிக்கொண்டிருந்தார்கள்.
அந்த மரத்தின் பெருங்கிளைகளை வெட்டாமல்
பாடைக்கு ஏற்றமாதிரியான கழிகளை வெட்டிப்போட்டிருந்தார் காசியண்ணன்.
அவர்தான் எல்லாமே.
அப்பா இறந்துவிட்டாரென்பதை
அப்போதுதான் நன்றாக உணர்ந்திருந்தேன்.
"பொண்ணுங்களுக்கு ஒரு கல்யாணம்காட்சின்னு பண்ணிப்பாக்காம போய்ட்டாரே.."
"இனிமே இந்த தம்பிதான் எல்லாமே பார்க்கணும்.."
"கோயில்விஷேஷநேரத்துல
இப்படி நடந்துட்டே.."
ஆளாளுக்கு பேசிக்கொண்டிருந்தார்கள்.
"தம்பி.. இங்க வாப்பா வந்து முடிய வழிச்சிக்க."
-காசியண்ணன்.
கொஞ்சநேரத்தில் அப்பாவை குளிப்பாட்டினார்கள்.
போஸ்ட்மாடம்செய்திருந்ததால் தண்ணீரை ரொம்ப ஊற்றாமல்
மேலுக்கு ஊற்றிவிட்டு பாடைக்கு மாற்றினார்கள்.
"கட்டபிள்ள காட்டுக்கு போறாரு..
கால்ல விழுந்து கும்புடுறவங்கள்லாம்
கும்புட்டுக்கோங்க.."
அம்மாவையும் அக்காள் தங்கைகளையும் பார்க்கவே முடியவில்லை.
அவ்வளவு கண்ணீர் என் கண்களில்.
ஒரு வழியாக அப்பாவை தூக்கினார்கள்.
அம்மாவின் அழுகுரல் என்னவோ செய்தது.
காரியத்தை முடித்துவிட்டு வீட்டிற்குவந்தபோது
வீடு அலசப்பட்டிருந்தது.
அப்பா இல்லாத வீட்டின் வெறுமையையும்
அம்மாவின் பாழ்நெற்றியையும்
பார்க்கப்பிடிக்காமல் வாசலிலேயே உட்கார்ந்திருந்தேன்.
கொஞ்சங்கொஞ்சமாக சகஜநிலைக்கு வீடு மாறத்தொடங்கியது.
அப்பா இறந்த ஒருவாரத்தில்,
கோயில்கும்பாபிஷேகம் நடந்தது.
அன்று இரவு ஏழுமணியிருக்கும்.
அப்பாவின் இறப்புச்சான்றிதழை எடுத்து பார்த்துக்கொண்டிருந்தேன்.
வீட்டில் டீவி ஓடிக்கொண்டிருந்தது.
தொப்பென்ற பெருஞ்சத்தம்.
வெளியில் ஓடிச்சென்று பார்த்தபோது,
அந்த மரம் நெடுஞ்சாண்கிடையாக வீழ்ந்துகிடந்தது.
காற்று கொஞ்சங்கூட இல்லை.
credits to;

0 comments:

Post a Comment